தெற்காசியாவில் முதல் ட்ரோன் பயணிகள் சேவை- சிறிலங்காவில் ஆரம்பமாகிறது
தெற்காசியாவில் முதல் முறையாக சிறிலங்காவில் பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக முதலாவது ட்ரோன் தாய்லாந்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல் பறப்பு வரும் 30 அல்லது 31ஆம் நாள் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள இந்த ட்ரோனில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.
30 நிமிடங்களில் இது பயணத் தூரத்தை எட்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனைத்துலக சந்தைகளில் விமானி இல்லாத மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் (eVTOL) விமானங்களை அறிமுகப்படுத்தும் பணியை விரைவுபடுத்துவதற்காக, சீன தொழில்நுட்ப நிறுவனமான EHang தொடங்கியுள்ள உலகளாவிய விரைவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ள முதல் நாடாக சிறிலங்கா அமைந்துள்ளது.
சிகிரியா மற்றும் பீதுருதாலகால மீதான ரம்மியமான விமானப் பயணங்கள், அத்துடன் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் கொழும்பில் உள்ள தங்கும் விடுதிகளுக்கும் இடையேயான பயணிகள் போக்குவரத்து ஆகியவை பரிசீலனையில் உள்ள சாத்தியமான வழித்தடங்களில் அடங்கும்.
மற்றொரு தொகுதி ட்ரோன்கள் நவம்பர் 28ஆம் திகதி கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் எந்த இடத்தில் இருந்து பயணிகள் சேவையை ஆரம்பிப்பது என்பது குறித்து வரும் 23ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறும் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
