மேலும்

ஷிரந்தி ராஜபக்சவும் மருத்துவமனையில் அனுமதி

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் முதல்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, நேற்று  கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, சிறப்புச் சிகிச்சைக்காக  9 ஆம் நாள் அவர் தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

‘சிரிலியா சவிய’ அறக்கட்டளையின் கணக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஒக்டோபர் 7 ஆம் நாள் கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் ஒக்ரோபர் 13 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவும் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில்  வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன; பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததையடுத்து, அவர் தற்போது சாதாரண மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *