மேலும்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, ஒக்டோபர் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூன்று இரத்தினக் கல் வர்த்தகர்களில் ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபா இலஞ்சத்தைக் கோரிப் பெற்றமை (இதில் 500,000 ரூபா முன்பணமாகப் பெறப்பட்டது) மற்றும் ஏனைய இருவரிடமிருந்து முறையே 1 மில்லியன் ரூபா மற்றும் 200,000 ரூபா இலஞ்சத்தைக் கோரிப் பெற்றமை,  முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே பொஸ்பேட்  ஏற்றுமதி செய்யும் வசதியை ‘லங்கா பொஸ்பேட்’ (Lanka Phosphate) நிறுவனம் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தமை, அந்த நிறுவனங்களுக்குத் தேவையான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, தனது தனிப்பட்ட செயலாளராகச் செயல்பட்ட நபரின் கணக்கில் முறையே 5,900,000 ரூபா மற்றும் 300,000 ரூபாவை வைப்பிலிடச் செய்தமை  அந்த நிதியைத் தனது அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சாமர சம்பத் தசநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.

தொழில்துறை இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவரும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாமர சம்பத் தசநாயக்கவை கொழும்பு பிரதம நீதிவான் முன்பாக நிறுத்திய போது அவரை 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *