மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் நாள்- தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன் இன்று அதிகாலை நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தான முன்றலில் இன்று காலை 7:30 மணியளவில்,  இடம்பெற்ற நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், ஈகச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், உள்ளிட்ட பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில்  நேற்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் தூபியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

இதில் பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பள்ளதோட்டம் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *