புதுடெல்லி மாநாட்டில் பிரெஞ்சு, பிரேசில் அதிபர்களையும் சந்திக்கிறார் அனுர
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் இந்தியா – செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 இல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொள்வார்.
அதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த அதிபரின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்டக் குழு நாளைய அமர்வில் பங்கேற்க இந்தியா செல்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இந்த உச்சிமாநாட்டில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமட் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக, உலகத் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் பல இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அதிபர் மக்ரோன் மற்றும் பிரேசில் அதிபர் லுலா டி சில்வா ஆகியோருடன் அவர் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் பொலிவியா, குரோஷியா, எஸ்தோனியா, பின்லாந்து, கிரீஸ், கயானா, கஜகஸ்தான், லிச்சென்ஸ்டீன், மொரீஷியஸ், செர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சீஷெல்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அத்துடன், 45க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டக் குழுக்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல அனைத்துலக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்வார்கள்.
