சீனாவிடம் அவசர உதவியைக் கோரியது சிறிலங்கா
பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள், பாலங்களை மீளமைப்பதற்கு சீனாவிடம் இருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், சீன தூதுவர் கீ சென்ஹொங்குடன் இன்று நடந்த சந்திப்பின் போதே, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, சீன அரசாங்கம் நிலைமையை மதிப்பிடவும், தொடர்புடைய அனைத்து துறைகளிலும் வழங்கக் கூடிய உதவிகளைப் பற்றி கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக, சீன தூதுவர் கூறினார்.
வெள்ளத்தால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க சீனாவிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் அவசர உதவியை எதிர்பார்க்கிறது என்று அவரிடம் சுட்டிக்காட்டினேன்.
இந்த விடயத்தை சீன அரசாங்கத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, சீனா மற்றும் ஏனைய சந்தைகளில் இருந்து மின்சார வாகனங்களை அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால், நாடு முழுவதும் மின்னேற்றும் நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்துமாறு, நான் சீனத் தூதுவரிடம் முன்மொழிந்தேன்.
எதிர்காலத்தில் அதிக மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்பதையும் நான் எடுத்துரைத்தேன்.
இந்த முன்மொழிவை சீனத் தூதுவர் சாதகமாக ஏற்றுக்கொண்டதாகவும், இது குறித்து சீன அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாக ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.
