மேலும்

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,  உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் , கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியப் பேரவையினரால் சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய சமஸ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கு,  தமிழ்நாடு அரசு இந்தியய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது.

தமிழ்நாட்டுடன், பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியென்பதும் பாரிய சவாலாகவே இருக்கும்.

இதன் பின்னணியில் சிறிலங்காவின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மற்றும் ஈழக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாகவும்  இந்தச் சந்திப்பின் போது உரையாடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை சிறிலங்கா அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் சிறிலங்காவில் காலூன்றி வருவதனையும்  தமிழ்த் தேசிய பேரவையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணத் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பாகவும் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஏனைய தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாக  தெரிவித்துள்ளார்.

இந்தச்சந்திப்பில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும்  கலந்து கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *