கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லனவை, பணி இடைநீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு மருத்துவ அதிகாரியாக பொறுப்பான பதவியில் இருந்த மருத்துவர் பெல்லன, முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல் நிலை தொடர்பான தகவல்களை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன வெளியிட்டது சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
