தமிழக அரசின் 54 தொன் உதவிப் பொருட்களுடன் வந்தது ‘சௌர்யா’
இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சௌர்யா’ மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்தக் கப்பல் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், தமிழக அரசின் 54 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.
கோதுமை மா, உப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ளன.
முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இந்திய கடலோரக் காவல்படையின் 4 கப்பல்கள் மூலமாக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது.
அதேவேளை, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் சிறப்பு கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்தியாவசிய மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பால்மா, மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் இந்த உதவிப் பொருள்களில் அடங்கியுள்ளன.
அவற்றுடன், கூடாரங்கள், போர்வைகள், நுளம்பு வலைகள், படுக்கை பொருட்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம் இல்லாத முகாம்கள் மற்றும் வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒளியூட்டும் கருவிகள் ஆகியவற்றையும் பாகிஸ்தான் கொடையாக வழங்கியுள்ளது.

