ரஷ்யாவிடம் எரிசக்தி கொள்வனவு குறித்து சிறிலங்கா பேச்சுவார்த்தை
நிலையான எண்ணெய் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மொஸ்கோவிற்கான சிறிலங்கா தூதுவர் ஷோபினி குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS க்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மசகு எண்ணெய் இறக்குமதியை மட்டுமல்லாமல், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், ரஷ்ய எரிசக்தி வளங்களை தொடர்ந்து பயன்படுத்த உதவும் வகையில் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடி வருவதாக சிறிலங்கா தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை, ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நாங்கள் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளோம், என்றும், சிறிலங்கா தூதுவர் ஷோபினி குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான எந்தவொரு எரிசக்தி ஒத்துழைப்பும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு கூடுதல் வருவாய் ஆதாரத்தைத் திறக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேற்கத்திய தடைகளுக்கு மத்தியில் மாற்று சந்தைகளைத் தேடும் ரஷ்யா ஐரோப்பாவிற்கு அப்பால் எரிசக்தி விற்பனையை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்தப் பேச்சுவார்த்தைகள் எடுத்துக் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனும் அதன் அனைத்துலக பங்காளிகளும் அத்தகைய ஏற்பாடுகளை சீர்குலைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
