கடற்படை முகாமை அகற்ற வேண்டாமென காரைநகர் மக்கள் கோருகிறார்கள்
காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று, அப்பகுதியில் வாழும் 147 தமிழ் மக்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, பாதுகாப்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் தான் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா முன்னிலையில் உள்ளது.
சிறிலங்காவின் கடற்பரப்பு மற்றும் ஆழ்கடல் பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய அனைத்துலக மட்டத்தில் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியிருந்தார்.
இது முற்றிலும் தவறானது. போதைப்பொருள் ஒழிப்புக்கான முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருந்தொகையான இராணுவத்தினர் இருப்பதாகவும், பொதுமகன் ஒருவருக்கு இரண்டு படையினர் இருப்பதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.
இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள்.
147 பேர் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
கடற்படை முகாம் இருப்பதால் தான் எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று காரைநகர் பகுதி தமிழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொதுமக்களின் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
தேசியப் பாதுகாப்புடன் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு , கிழக்கு மாகாணத்தில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன.
காணி விடுவிப்புக்குத் தடையாக உள்ள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முப்படைகளின் மறுசீரமைப்புக்காக அடுத்த ஆண்டு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும்.
சிறிலங்கா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முப்படைகளின் மறுசீரமைப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
