புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை
திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது.
நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது.
கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன.
இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது. தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது.
காவல்துறையினர் இதுபோன்ற விடயங்களில், சட்டத்தை செயற்படுத்தும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சன் செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன்.
அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையப் பதிவுகளில் உள்ளன.
அடுத்ததாக இந்த மோதல் காவல்துறையினருக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்பட்டது.
இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது.
இவ்வளவு காலம் இது விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சிற்றூண்டிசாலையில் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார்.
இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.
மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகிறது.
விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் அங்கு விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம்.
விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடம் இருந்ததே தவிர, அங்கு வழிபாடு செய்யும் இடம் இருக்கவில்லை.
குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் மாவட்ட செயலக அலுவலகத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது
இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை.
தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை.
மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. இது வரலாற்றில் மட்டுமே இருக்கும்.
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
