அனுரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 மில்லியன் ரூபா செலவு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதம் நேற்று ஆரம்பமானது.
சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கான செலவினங்கள் தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று நடந்த போது, சிறிலங்கா அதிபர் கடந்த 2024 டிசெம்பர் தொடக்கம் 2025ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், ஜெர்மனி, மாலைதீவுகள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 8 நாடுகளுக்கான பயணங்களுக்காக 14.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 2022–2024 காலப்பகுதியில், 385 பேருடன், 24 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும், இதற்காக 1,007.346மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
