மேலும்

சிறிலங்காவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா உறுதி

சிறிலங்காவில்  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினரும், அதன் பொருளாதார விவகாரக் குழுவின் பணிப்பாளருமான வாங் குவோஷெங் (Wang Guosheng) உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவிற்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

சிறிலங்காவை, சீனாவின் நெருங்கிய நண்பர் என்று வர்ணித்த,  வாங் குவோஷெங், சிறிலங்காவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய மேலும் சீன நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உயர் மட்ட சீனக் குழு, வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு, பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தது.

இந்தச் சந்திப்பின் போது, ​​இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியது.

அத்துடன் சிறிலங்காவில் பல துறைகளில் சீன முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சீனக் குழுவில் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினரும் பொருளாதார விவகாரக் குழுவின் துணை பணிப்பாளருமான ஃபூ ஷிபாங்,  சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகாரக் குழுவின் உறுப்பினர் மாவோ டிக்ஷி; சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகாரக் குழுவின் பணியக பணிப்பாளர்  லியு ஹுவான்சிங்; மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகாரக் குழுவின் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளர் ஜாங் ஜின்ஜி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *