வடக்கில் பாகிஸ்தானியர்கள்- தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை
வடக்கு மாகாணத்தில் பாகிஸ்தானியர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளமை தென்னிந்திய பாதுகாப்பு வட்டாரங்களில், கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னாரில் அண்மையில் இடைநிறுத்தப்பட்ட காற்றாலைத் திட்டத்திற்காக உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்று 28 பாகிஸ்தானியர்களை கொண்டு வந்த நிலையில், இந்த கரிசனைகள் உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
காற்றாலை திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உள்ளூர்வாசிகள் சுற்றுச்சூழல் கவலைகள் குறித்து போராட்டங்களை நடத்தியதால், உள்ளூர் சமூகங்களின் ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளைத் தீர்க்காமல் மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதேவேளை, குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட போதைப்பொருள் கடத்தலுக்கு மன்னார் படுகை பெரும்பாலும் வழக்கமான வழியாகப் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ளன.
