இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மையைப் பேணுவதில் சிறிலங்காவுக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்றும், அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அனைத்து கூட்டாளிகளுடனும் திறந்த மற்றும் சமநிலையான உறவுகளை வளர்ப்பதன் அடிப்படையில் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டை சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக நாடு எதிர்கொள்ளக் கூடிய சாத்தியமான சவால்கள் குறித்தும், அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் விளக்கியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
