உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்
இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், கோவிட்-19 பேரழிவு மற்றும் பொருளாதார வங்குரோத்து நிலை ஆகிய- எமது நாடு எதிர்கொண்ட மூன்று துயரங்களின் போது, இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது.
இந்தியா ஒரு படி மேலே சென்று, சிறிலங்காவுக்கும் சிறிலங்கா மக்களுக்கும் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி, மிகப்பெரிய கொடையாளராக மாறியுள்ளது.
உங்கள் நாட்டின் மகத்தான ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
துன்ப காலங்களில் சிறிலங்காவுக்கு அளித்த தடையற்ற ஆதரவிற்காக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலான, எனது வருகையின் நோக்கம், எமது உறவை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது மற்றும் முன்னேற்றுவதாகும்.
இந்தியா-சிறிலங்கா உறவுகளின் முக்கியத்துவம் இந்த ஆண்டுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நீண்டகால உறவாகும்.
இது ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அண்மைக் காலங்களில், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த பொதுவான அணுகுமுறையுடன், ஒரு பொதுவான குறிக்கோள் மற்றும் பொதுவான அடையாளத்துடன், எமது இரு நாடுகளுக்கும் எமது மக்களுக்கும் செழிப்பைக் கொண்டுவர நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அதுதான் பொதுவான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய அரசியலின் முக்கிய நோக்கம் அமைதியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார வளர்ச்சிக்கு அமைதியும் பாதுகாப்பும் இன்றியமையாதவை.
சமமான வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு எமது மக்களுக்கும் உலக சமூகத்தில் வாழும் மக்களுக்கும் உதவும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
