10 மாதங்களில் 6.1 மில்லியன் பேர் குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணை
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை- சுமார் 6.1மில்லியன் நபர்கள் (6,127,138) பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் 5,414 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர் என்றும், சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார்.
காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
இந்தக் காலகட்டத்தில், 56,365 பிடியாணை கைதுகளும், 37,607 திறந்த பிடியாணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எந்தவொரு சமூக விரோத, அல்லது சட்டவிரோத குற்றத்தையும் செய்யத் திட்டமிடும் அல்லது சதி செய்யும் எந்தவொரு நபருக்கும், எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
