மின்கட்டண உயர்வு கோரிக்கையை நிராகரித்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
சிறிலங்கா மின்சார சபை முன்மொழிந்த 6.8 சதவீத கட்டண அதிகரிப்பு முன்மொழிவை சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 7.7 பில்லியன் ரூபா வருமான பற்றாக்குறையை ஈடுகட்ட சிறிலங்கா மின்சார சபை 6.8 சதவீதம் மின்சார கட்டணங்களை உயர்த்த முன்மொழிந்திருந்தது என சிறிலங்கா பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால், தெரிவித்தார்.
பின்னர் மின்சார சபை தனது திட்டத்தை திருத்தி, 20.8 பில்லியன் ரூபா அதிகரிப்பைக் கோரியது.
இருப்பினும், ஒன்பது மாகாணங்களிலும் நடத்தப்பட்ட பகுப்பாய்வு மற்றும் விரிவான பொது ஆலோசனைகளைத் தொடர்ந்து – கிட்டத்தட்ட 500 பங்கேற்பாளர்கள் எழுத்து மற்றும் வாய்மொழி கருத்துக்களை சமர்ப்பித்ததைத் அடுத்து, தற்போதைய மின்சார கட்டணங்களை மாற்றாமல் வைத்திருக்க ஆணைக்குழு முடிவு செய்தது.
தற்போதுள்ள கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அடுத்த கட்டண திருத்தம் வரை அமுலில் இருக்கும்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஐந்து மின்சார கட்டண திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் விளைவாக ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது கட்டணங்கள் 44 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முந்தைய காலாண்டுகளில் ஈட்டப்பட்ட மேலதிக வருவாயை நுகர்வோருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து 22,875 மில்லியன் ரூபா இலாபத்தில் இருந்து. 8,487 மில்லியன் ரூபா தற்போதைய பற்றாக்குறையை ஈடுகட்டப்படும்.
மீதமுள்ள 16,975 மில்லியன் ரூபா 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டண திருத்தத்திற்காக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்.
அத்துடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் ஏழு நிபந்தனைகளை சிறிலங்கா மின்சார சபை மற்றும் லங்கா மின்சார நிறுவனம் (LECO) மீது விதித்துள்ளது.
இதில் செலவுக் கணக்குகளைத் தயாரித்தல், மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் நுழைதல், 2024 முதல் 60,461 மில்லியன் இலாபத்தில் தடயவியல் தணிக்கை நடத்துதல் மற்றும் எதிர்கால கட்டண முன்மொழிவுகளில் இலாபங்கள் வெளிப்படையாக சரிசெய்யப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, மின்சார உற்பத்தியில் செலவுத் திறனை வலியுறுத்தி, போட்டி விலையில் மின் உற்பத்திக்கான எரிபொருளை வாங்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு ஒரு அமலாக்க உத்தரவை பிறப்பித்தது.
மின்சார கட்டணங்களை ஆண்டிற்கு நான்கு முறை திருத்துவது பகுத்தறிவு அல்ல என்றும் ஆணைக்குழுழு தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் கட்டண நிலைத்தன்மையை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.