சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியா – சிறிலங்காவுக்கு ஒரு பாடம்
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த அறிவிப்பு, சிறிலங்காவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அச்சுறுத்தியுள்ளது.
இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள உதய கம்மன்பில,
இரண்டு மின் கட்டமைப்புகளை இணைப்பதற்கும், பல்துறை எரிபொருள் குழாய் பதிப்பதற்கும் இந்தியாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாகிஸ்தானுடனா நீர்ப்பகிர்வு உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தியுள்ள இந்தியா, ஒரு பிரச்சினை ஏற்பட்டால் எரிசக்தி இணைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பாக அது என்ன செய்யும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அடிப்படை மனிதாபிமானத் தேவையான நீர் விநியோகத்தையே துண்டிக்க முற்படுகின்ற நிலையில், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நாம் இருமுறை யோசிக்க வேண்டும், என்றும் கூறினார்.