இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடந்து இரண்டு நாட்கள் கழித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்துப் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் இந்தியாவின் பக்கம் சிறிலங்கா நிற்பதாக கூறியிருந்தார்.
அதேவேளை, இந்த தாக்குதலை அடுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் போரைத் தொடங்குகின்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஒன்று உருவானால், இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்துள்ள சிறிலங்காவின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கும், தற்போது எழுந்துள்ள போர்ச் சூழலுக்கும் தொடர்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் சிறிலங்கா நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.