இந்தியப்பிரதமருடன் அவசரமாக தொலைபேசியில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இன்று பிற்பகல் இந்த உரையாடல் சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதாக இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி, இந்திய மக்களுடன் சிறிலங்கா எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி உரையாடிய போது, பதற்றமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என்று சிறிலங்கா எதிர்பார்ப்பதாகவும், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.