மேலும்

கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்படுவோர் மீது நடவடிக்கை – சம்பந்தன்

sumanthiran-sam-mavaiமைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், தாமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நேற்று தொலைபேசியில் கடுந்தொனியில் உரையாடியதையடுத்து, மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இன்று அனந்தி சசிதரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை பகிரங்கமாக விமர்சிக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தாம் மாவை சேனாதிராசாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவை சேனாதிராசாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுடன் பேசியிருப்பார் என்று நம்புகிறேன்.

நாம் வடக்கு மாகாணசபையில் 30 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம்.அவர்களில் இரண்டு மூன்று பேர் தான் இத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

ஆனால் அதற்கு அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *