நீர்த்துப்போன ஐ.நா அறிக்கை – குற்றம்சாட்டும் சிவில் சமூகம்
இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
செப்ரெம்பர் 3 ஆம் நாள் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் செப்ரெம்பர் 7ஆம் நாள் முதல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முதல் இடதுசாரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளை இந்த அறிக்கை வரவேற்றது. இருப்பினும், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கவும், மேலும் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமை வழங்கும் செயல்முறைகளை விரைவுபடுத்தவும் சிறிலங்கா அரசாங்கத்தை அது வலியுறுத்தியது.
அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்டகாலக் கைதிகளை விடுவிக்கவும் அந்த அறிக்கை கோரியது.
“பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறை மற்றும் ஆழமாக வேரூன்றிய தண்டனையின்மை ஆகியவற்றை மாற்றுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறினார்.
“போருக்குப் பிந்தைய காலத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்குகள் மற்றும் சில குற்றங்களைக் கையாள்வதற்கு சிறிலங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது ஊக்கமளிப்பதாக இருந்தாலும், நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வரும் தண்டனையின்மையின் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மோதல் தொடர்பான சான்றுகளைச் சேகரிக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் நடத்தப்படும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் (SLAP) மீது அந்த அறிக்கை போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று சிவில் சமூக மற்றும் மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளன.
சிறிலங்காவில் நிகழும் பெரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான சான்றுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக 2021ஆம் ஆண்டில் ஐ.நா சபையால் நிறுவப்பட்ட ஒரு முன்முயற்சியே சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் ஆகும்.
“அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தனது சொந்த சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கைகளுக்கும் பொறுப்புக்கூறல் பணிகளுக்கும் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படாதது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது,” என்று மகளிர் செயல் வலையமைப்பைச் சேர்ந்த சி. ரனிதா ஞானராஜா UCA நியூஸிடம் கூறினார்.
“சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்காதது கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த மறுப்பின் தாக்கங்களை அறிக்கை போதுமானளவு எடுத்துரைக்கவில்லை அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் சான்றுகளைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஆணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உறுதியாக அழைப்பு விடுக்கவில்லை,” என்று அந்தச் செயற்பாட்டாளர் வலியுறுத்தினார்.
வடக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, இந்த அறிக்கை “நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். மேலும், பல ஆண்டுகளாகப் போர் மீதான சிறிலங்காவின் அனைத்துலக கண்காணிப்பு சுருங்கி விட்டது என்றும் அவர் கூறினார்.
“பல பத்தாண்டுகளாக அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அது 2009-ல் ஒரு இரத்தக் களரியின் உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும் எங்கள் சமூகம் நம்புகிறது. மேலும், இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் எங்களுக்கு நீதி தேவை.
ஆனால், இப்போது நாங்கள் காண்பது அனைத்துலக சமூகத்தின் மொழி மாற்றமும், மென்மையான போக்கும்தான்,” என்று அந்தப் பாதிரியார் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ஐங்கரன் குகதாசன், தற்போது நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களின் அடையாளப்பூர்வமான போர்க்கால வழக்குகள் ஒரு வரவேற்கத்தக்க அறிகுறி என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கு நாட்டில் போதுமான சட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
அங்கிலிக்கன் பாதிரியாரும், கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான அருட்தந்தை எம். சக்திவேல், போரின் இறுதிக் கட்டங்களில், அரசபடைகள் கிளர்ச்சியை நசுக்கியபோது நடந்த மனித உரிமை மீறல்கள் உட்பட, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் செய்யப்பட்ட நீண்டகால அமைப்புரீதியான குற்றங்களை இந்த அறிக்கை அங்கீகரிக்கத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
வழிமூலம் – ucanews
