மேலும்

இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரிய சிறிலங்கா

வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா,  இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரியிருப்பதாக இந்திய ஊடகமான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவும் சிறிலங்காவும் தங்களது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தவும், மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவும் உள்ளன.

இதில், இந்தியா வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவது தொடர்பான ஒரு உடன்பாடும் அடங்கும்.

இந்தத் திட்டங்களை இறுதி செய்வதற்காக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்ரெம்பர் 8 முதல் 10 ஆம் நாள் வரை மூன்று நாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார்.

வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா  இந்திய வான் பாதுகாப்புத் துப்பாக்கிகளைக் கோருகிறது.

ஆகாஷ் உட்பட குறுகிய மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா, உற்பத்தி செய்கிறது.

மற்ற இரண்டு உடன்பாடுளும், சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா வழங்கும் தற்போதைய பயிற்சி வசதிகளை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டையும் இரு நாடுகளும் ஆய்வு செய்யும்.

இந்த ஐந்தாண்டு கால உடன்பாடு, கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி, துறைமுக வருகைகள் மற்றும் உபகரண ஒத்துழைப்பு ஆகியவற்றை முறைப்படுத்துகிறது.

இந்தக் கட்டமைப்பு, சிறிலங்காவின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக,  சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ தளபாடங்களை வழங்க வழிவகை செய்கிறது.

பாதுகாப்புத் துறையையும் வகிக்கும் சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.

சிறிலங்கா தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் கலந்தாலோசனை நடத்துவார் என பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் செல்லும்.

ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988-ல் சிறிலங்காவுக்கு  பயணம் மேற்கொண்ட பிறகு, ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தியாவும் சிறிலங்காவும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பிராந்தியப் பாதுகாப்பு, தற்காப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, மற்றும் வலுவான மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு பன்முகக் கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியதாலும், 2025-ல் சிறிலங்காவில் ஏற்பட்ட டித்வா புயலுக்குப் பிந்தைய மீட்புப் பணிகளில் முதல் நாடுகளில் ஒன்றாக உதவி வழங்கியதாலும் இருதரப்பு உறவு மேலும் உத்வேகம் பெற்றது.

இது, இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தற்போது இந்த ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், பயிற்சிப் பரிமாற்றங்கள், கடற்படைத் துறைமுக வருகைகள், கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, பேரிடர் மீட்பு, மற்றும் உபகரணங்கள் மற்றும் திறன் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சிறிலங்காவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேடுதல்-மீட்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்கின்றன.

இந்தியா,சிறிலங்காவுக்கு இராணுவப் பொருட்கள், தளங்கள் மற்றும் உதவிப் பொதிகளை, பெரும்பாலும் வணிக ரீதியான விற்பனையை விட கொடைகள் மூலமாகவே அதிகளவில் வழங்கி வருகிறது.

அண்மைய இந்திய உதவியில், சிறிலங்கா கடலோரக் காவல்படையின் தேடுதல் மற்றும் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான சொத்துக்களும், கடலோரக் காவல்படையின் பயன்பாட்டிற்கான தனிநபர் நீர் வாகனங்கள் போன்ற பொருட்களும் அடங்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *