மேலும்

5 படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் பிள்ளையான் சந்தேக நபராக அறிவிப்பு

2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்)  மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு,  வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டார்.

இதன்போது, விரிவான விசாரணைகளுக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவு  சமர்ப்பித்த அறிக்கைகளின்படி,  ஐந்து கொலைகளும் ரி-56 ரகத்  துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் பிள்ளையன் மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள்,  மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2008 மே 22 ஆம் நாள் காத்தான்குடி பிரதான வீதியில் நிகழ்ந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மூன்றாவது சம்பவத்தில் கண்ணங்குடா பகுதியில், 2008 ஓகஸ்ட் 20 ஆம் நாள்  இரவு ஆயுதமேந்திய மர்ம நபர்களால்  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் குற்றங்கள் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

முதல் சந்தேக நபர் ஏற்கனவே நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள், முறையே 2025 ஓகஸ்ட் 13 மற்றும் நவம்பர் 13 ஆம் நாள் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட இரண்டு   சந்தேக நபர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதேவேளை,  பிள்ளையான், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட  வழக்கில்  கைது செய்யப்பட்டு,  வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரும் போது, பிள்ளையனை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வெலிக்கடை சிறை கண்காணிப்பாளருக்கு மட்டக்களப்பு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *