சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவ கனடா உறுதி
பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கனடா உறுதியளித்துள்ளது.
நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவுடன் நடத்திய சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட மீட்புத் திட்டத்தை கனடா பாராட்டுகிறது என்றும், சிறிலங்கா அதன் முறையான சேதம் மற்றும் தேவை மதிப்பீட்டை முடித்தவுடன் ஒட்டாவா ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரழிவுக்குப் பிந்தைய மதிப்பீட்டை இறுதி செய்தவுடன், சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தி, முன்னுரிமைப் பகுதிகளில் அதிகபட்ச உதவியை வழங்க கனடா தயாராக உள்ளது என்றும் கனடியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
