சிறிலங்காவுடன் வரிகள் குறித்து மீண்டும் பேச்சு – அமெரிக்கா பச்சைக்கொடி
சிறிலங்காவுடன் மீண்டும் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுக்களை தொடங்குவதில் அமெரிக்கா கவனம் செலுத்தவுள்ளதாக அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்ட அவர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேசிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டிட்வா பேரிடருக்குப் பிந்தைய சிறிலங்காவின் மீட்சிக்கு உதவ தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், ஹூக்கர், உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறிலங்காவின் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
