வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் கூடுதல் செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
கொடைகள் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை இந்தக் குழுவினர் உறுதி செய்வார்கள்.
வாரத்தில் மூன்று நாட்கள் கூடி இந்த சிறப்புக் குழு முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும்.
இந்த கொடைகள் பொதுமக்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்படும்.
அதிபர் செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சின் மூலம் இந்த செயல்முறையின் முன்னேற்றம் குறித்த சுருக்கமான அறிக்கை அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டு நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கொடைகள் விநியோகிக்கப்படுவதை இந்தக் குழு உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
