மீட்பு நடவடிக்கையில் படையினரை இரட்டிப்பாக்கியது சிறிலங்கா இராணுவம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் புயல் மற்றும் வெள்ளம், நிலச்சரிவுகளினால், இதுவரை 635 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 192 பேர் காணாமல் போயுள்ளனர்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர்- சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ பல்லாயிரக்கணக்கான படையினரை அனுப்பியுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் துப்புரவுப் பணிகளை துரிதப்படுத்த 38,500 படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆரம்பத்தில் இருந்த படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
பேரிடர் ஏற்பட்டதிலிருந்து, சிறிலங்கா படையினர் 31,116 பேரை மீட்டுள்ளனர் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மீட்ப முயற்சிகள் மீட்பு நடவடிக்கையாக மாறியதால் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே குறிப்பிட்டுள்ளார்.
