அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரண்
சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஆணையாளருமான நிமால் புஞ்சிஹேவா, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்ட விதிகளின் சில பிரிவுகள், சிக்கலானதாக தோன்றுகிறது.
அவசரகால அதிகாரங்கள் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் திறமையாகச் செயற்பட அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அரசியலமைப்பு விதிகளை மீற முடியாது. அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் சில பகுதிகள், இயற்கை பேரழிவு தொடர்பான அவசர காலத்தின் போது அல்லாமல், ஆயுத மோதல்களின் போது பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றன.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளை (அத்தியாயம் 40) சட்டம், அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதித்தாலும், அவை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் எழும் சவால்களைத் தீர்க்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் .
கடந்த காலங்களில், உள்நாட்டுப் போர் போன்ற, அந்தக் காலகட்டத்தில் இருந்த நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்காக, அவசரகால விதிமுறைகள், பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
தற்போது, நாடு ஒரு பெரியளவிலான பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை திறம்பட பராமரிப்பதற்கும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் அவசரகால அதிகாரங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், தற்போதைய விதிமுறைகளின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்பதை நாங்கள் கவனித்துள்ளோம்.
அடுத்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் இந்த அவதானிப்புகளை சமர்ப்பிப்போம்,” என்றும் நிமால் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்
டிட்வா புயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பை பேணல், பொது ஒழுங்கை உறுதி செய்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் அவசியத்தை மேற்கோள்காட்டி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால், கடந்த நவம்பர் 28 ஆம் திகதி அவசரகால நிலையை அறிவித்திருந்தார்.
