அனுரவுடன் பலனளிக்காத சந்திப்பு – தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றம்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள் திறந்த நிலையில் இடம்பெற்ற போதும், பலனளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் எழுப்பிய பெரும்பாலான முக்கிய விடயங்களுக்கு சிறிலங்கா அதிபர் “பார்ப்போம்” என்று மட்டுமே பதிலளித்தார் என அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்படும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் அண்மைய திருகோணமலை சம்பவம் ஆகியன குறித்து பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அரசியல் தீர்வின் அவசியத்தை சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டதாகவும், சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சி அரசியல் தீர்வு குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது, அதன் முக்கிய கொள்கைகளில் சமரசம் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தியது.
பொறுப்புக்கூறல் விடயத்தில், அனைத்துலக பொறிமுறைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது, உள்நாட்டு செயல்முறையை ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியது.
எனினும், அனைத்துலக ஈடுபாட்டை அரசாங்கம் அனுமதிக்க விரும்பாத நிலையில், தாங்கள் உறுதியளித்த உள்நாட்டு பொறிமுறை முன்னேற்றத்தில் இருப்பதாக சிறிலங்கா அதிபர் கூறினார்.
இருப்பினும் நாங்கள் அதை ஏற்கவில்லை என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.
அவர் எந்த உறுதியான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை என்றும், “சிந்திப்போம், விவாதிப்போம், முயற்சிப்போம்” என்று மட்டுமே மீண்டும் மீண்டும் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தச் சந்திப்பு எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
2026 ஜனவரியில், அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை தொடங்கும் – அல்லது முன்னேற்றம் ஏற்படும் என்பதுதான் சிறிலங்கா அதிபரின் ஒரே உறுதிமொழி என்றும் அவர் கூறினார்.
