சிறிலங்கா ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்
உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறைகளை தடுக்கக் கூடிய அறிக்கைகளை, வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளூராட்சி சபைகள் இல்லாவிட்டால், அவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்படாது என சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூறியிருந்தார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள், இதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை வலியுறுத்தியிருந்தன.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
“ஜனாதிபதியின் கருத்துகள் மூலம், ஒரு தரப்பு வேட்பாளர்கள் பாரபட்சத்திற்கு ஆளாகிறார்கள், மற்றொரு தரப்பு நியாயமற்ற நன்மையைப் பெறுகிறது.
நாங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் எழுதி, இதுபோன்ற அறிக்கைகளை மீண்டும் வெளியிட வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
