இந்துக்களை நீக்குமாறு மோடியிடம் வலியுறுத்திய மகாநாயக்கர்கள்
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள பௌத்த புனிதத்தலமான புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பில் இருந்து இந்துக்கள் நீக்கப்பட வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.
அண்மையில் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அனுராதபுர சிறிமா போதி விகாரைக்குச் சென்றிருந்த போது, அதன் விகாராதிபதி அஷ்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், கடிதம் ஒன்றை கொடுத்திருந்தார்.
புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பை முழுமையாக பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, வலியுறுத்தி, மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்புட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வாககொட சிறி ஞானரதன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கரகொட உயங்கொட தேரர், ராமன்ன நிகாயாவின் மகாநாயக்கர் மாகுலேவே சிறி விமல தேரர் ஆகியோர் அந்தக் கடித த்தில் ஒப்பமிட்டுள்ளனர்.
மாவட்ட நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, நான்கு பௌத்தர்களையும், நான்கு இந்துக்களையும் கொண்டதாக உள்ள, புத்தகயா முகாமைத்துவ குழுவின் முழுக் கட்டுப்பாட்டையும் பௌத்தர்களிடம் வழங்க கோரி, இந்தியாவில் இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை அடிப்படையாக கொண்டு இந்தியப் பிரதமரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லிக்குத் திரும்பிய பின்னர், இதுபற்றி தாம் கவனமெடுப்பதாக, இந்தியப் பிரதமர் உறுதியளித்திருந்தார்.