சிக்கலில் சிக்கினார் அமைச்சர் வசந்த சமரசிங்க
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வர்த்தக அமைச்சராக உள்ள, வசந்த சமரசிங்க, மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரா என்பது குறித்து கல்கிசை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
தேசிய தொழிலாளர் நிறுவனம் என்று அழைக்கப்படும் அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடம், தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்ட நபர்களால், 3.6 மில்லியன் ரூபாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், அமைச்சர் வசந்த சமரசிங்கவை, சந்தேக நபராக பெயரிடுவதா இல்லையா என ஜூன் 16 ஆம் திகதி உத்தரவு பிறப்பிப்பதாக கல்கிசை நீதிவான் சதுரிக்க டி சில்வா அறிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த கொழும்பு காவல்துறை மோசடிப் பிரிவு, சமர்ப்பித்துள்ள ஆரம்ப அறிக்கைகளின்படி, அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளின் தொடர்பு தெளிவாகத் தெரிவதாக, மைத்ரி குணரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வசந்த சமரசிங்க தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகக் காட்டிக் கொண்டாலும், குறிப்பிட்ட சொத்து அதற்குச் சொந்தமானது அல்ல.
தொழில் திணைக்கள ஆவணங்கள், வசந்த சமரசிங்கவும் அவரது கூட்டாளிகளும், தேசிய தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் போல காட்டிக் கொண்ட போதும், அங்கு எந்தப் பதவிகளையும் வகிக்கவில்லை என்றும், அவர்கள் வெளியாட்கள் என்றும் உறுதிப்படுத்துகின்றன.
தேசிய தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் போல காட்டிக் கொண்டு, குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, அவர்களை சந்தேக நபர்களாகக் குறிப்பிடுமாறும் நீதிமன்றத்தை வலியுறுத்தியிருந்தார்.