தேசபந்துவின் பிணைக்கு எதிராக மீளாய்வு மனு
பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க, மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபர் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
மாத்தறை மேல் நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையாகிய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்குவதை கடுமையாக எதிர்த்த போதும், மாத்தறை நீதிவான் அருண புத்ததாச, கடந்த 10 ஆம் திகதி, அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
20 நாட்கள் தலைமறைவாக இருந்தவரை, விடுவிப்பது அவருக்கு எதிரான விசாரணையைப் பாதிக்கும் என சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்ட போதும் நீதிவான் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
2023ஆம் ஆண்டு டிசெம்பரில், வெலிகமவில் உள்ள W 15 விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கிலேயே, நீதிமன்றத்தில் சரணடைந்த தென்னகோன், மார்ச் 19 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே, வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 2.5 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.