மேலும்

மாலியில் துருப்புக்காவி மீது கண்ணிவெடி தாக்குதல் – 2 சிறிலங்கா படை அதிகாரிகள் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில், துருப்புக்காவி ஒன்றில் பயணம் செய்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

மாலியில் ஐ.நா அமைதிப்படையினருக்கான விநியோக வழித்துணைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவ அணி மீது, உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ற்சா என்ற இடத்தில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே, சிறிலங்கா இராணுவ அணி தாக்குதலில் சிக்கியது.

இதில், WMZ ரக துருப்புக்காவி கவசவாகனம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. அதற்குப் பின்னால் சென்ற மற்றொரு வாகனமும் சேதமுற்றது.

இந்த தாக்குதலில் துருப்புக்காவி கவசவாகனத்தில் பயணம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் 11 ஆவது இலகு காலாட்படையைச் சேர்ந்த கப்டன், ஜெயவிக்ரம, 1ஆவது இயந்திர காலாட்படையைச் சேர்ந்த கோப்ரல் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர்.

பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் குமாரசிங்க, லான்ஸ் கோப்ரல் புஷ்பகுமார, லான்ஸ் கோப்ரல் சந்திரசேகர ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த சிறிலங்கா படையினர் நைகர் ஆற்றங்கரையில் உள்ள வணிக நகரான காவோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு  ஆண்டுக்கு மேலாக மாலியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பணியாற்றி வருகின்றனர்.

200 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணி அங்கு நிலை கொண்டுள்ளது. முதல் முறையாக சிறிலங்கா இராணுவ அணி அங்கு தாக்குதல் ஒன்றில் சிக்கி உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது.

உயிரிழந்த சிறிலங்கா படையினரின் சடலங்கள் விரைவில் கொழும்புக்கு கொண்டு வரப்படும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *