மேலும்

4419 ஏக்கரில் ஒரு அங்குல நிலமும் விடுவிக்கப்படாது – யாழ். படைகளின் தளபதி

Major General Mahesh Senanayakaயாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

2010ஆம் ஆண்டு வரை பலாலி உயர் பாதுகாப்பு வலயம், 11,269 ஏக்கர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

அதன் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், 7,210 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமான எஞ்சியுள்ள எந்தக் காணிகளையும் மீள ஒப்படைப்பதில்லை என்பதே இராணுவத்தின் நிலைப்பாடாக உள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொள்ளாமல் பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளுடன் உள்ள நிலங்களை மேலும் குறைக்க முடியாது.

காணி உரிமைகளை மீளப் பெற முடியாதவர்களுக்கு அரசாங்கம் மாற்றுக்காணிகளை வழங்க வேண்டும். தற்போதுள்ள இடத்தில் இருந்து ஒரு அங்குல நிலத்தையேனும், இராணுவத்தினால் விடுவிக்க முடியாது.

யாழ். குடாநாட்டில் இராணுவத்தின் வசமிருந்த 27,259 ஏக்கர் காணிகளில், 21,134 ஏக்கர் காணிகள், 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 11 கட்டங்களாக விடுவிக்கப்பட்டு விட்டன.

யாழ். குடாநாடு முழுவதிலும், நாம் பல்வேறு முகாம்களையும் சோதனைச்சாவடிகளையும் அகற்றியுள்ளோம். எனினும், ஆளணியின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள 51, 52, 55ஆவது டிவிசன்களின் கீழ் தலா 3 பிரிகேட்கள் உள்ளன. இந்த பிரிகேட்கள் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளன.

நான் பொறுப்புடன் கூறுகிறேன், இனிமேலும் யாழ்ப்பாணத்தில் முகாம்கள் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ மாட்டாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *