மேலும்

லசந்த கொலையுடன் தொடர்புடைய புலனாய்வு அதிகாரிக்கு பிரகீத் கடத்தலுடனும் தொடர்பு

Prageeth Ekneligodaசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரியான சார்ஜன்ட் பிரேமானந்த உடலகம, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும் தொடர்புபட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர், பிரகீத் எக்னெலிகொட கடத்தலுக்கான குழுவொன்றை ஒருங்கிணைப்பதில் தொடர்புபட்டிருந்தார் என்று, சட்டமா அதிபர் சார்பில் நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலையான மூத்த சட்டவாளர் திலீப் பீரிஸ் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் மூலம், சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே, பிரகீத் எக்னெலிகொட கடத்தலுக்கான குழுவை ஒருங்கிணைத்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிவானுக்குத் தெரியப்படுத்தினார்.

“எக்னெலிகொட, 2009 ஓகஸ்ட் மாதமும், 2010 ஜனவரி மாதமும், இரண்டு தடவைகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த இரண்டு கடத்தல் சம்பவங்களிலும், சார்ஜன்ட் பிரேமானந்த உடலகம தொடர்புபட்டுள்ளார் என்பதற்கான தொலைபேசி பதிவு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

எனவே, இந்த வழக்கில் சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவையும் ஒரு சந்தேக நபராக குறிப்பிட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.” என்றும் அரச சட்டவாளர் நீதிவானிடம் கோரியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *