மேலும்

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொறிமுறைக்கே ஐ.நா உதவும் – பான் கீ மூன் உறுதி

cm-ban ki moonபாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ .நா பொதுச்செயலர் பான் கீ மூன், யாழ்.பொதுநூலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார்.

ஆறு நிமிடங்கள் மாத்திரமே நடந்த  இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,

“ஐ.நா பொதுச்செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர தாமதமானதால் எல்லா  நிகழ்வுகளும் தாமதாகி விட்டன. ஒரு மணித்தியாலம் காத்திருந்தோம். அ தன் பின்னர் அவரது அதிகாரி வந்து நீங்கள் வெறுமனே கைலாகு  கொடுத்து விட்டு அவரை வழியனுப்பி விடுங்கள் என கேட்டார். அதற்கு நாம் மனவருத்தத்தை தெரிவித்தோம்.  பின்னர் ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கி தரப்பட்டது.

ஆறுநிமிட பேச்சு தான் எமக்கு இடையில் நடைபெற்றது.  இது  இப்படி  தான்  நடக்கும் என  முன்னரே  நான்  ஊகித்துக் கொண்டதால் எங்கள் பிரச்சினைகள் தொடர்பான  ஆவணங்களை தயாரித்து அவற்றை  எல்லாம் அவரிடம் கையளித்துள்ளேன்.

cm-ban ki moon

காணாமல்போனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தொடர்பிலான விபரங்களை ஒரு நூல் வடிவில் கையளித்துள்ளேன். விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான அறிக்கைகளையும் கையளித்துள்ளேன்.

ஐ.நா பொதுச்செயலர் 2009ம் ஆண்டு இங்கு வந்திருந்த போது மனித உரிமை சம்பந்தமாக  எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது.

எனினும் பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை. போர்க்குற்றம் தொடர்பிலான பொறிமுறை தொடர்பில் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்டுக் காட்டினேன்.

நல்லிணக்கத்திற்காக பாரிய நிதி செலவிடப்படவுள்ளதாகவும், அதற்காக உலக நாடுகள் பணத்தை வாரி வாரி அளிக்கவுள்ளதாகவும் , கூறப்பட்டுள்ளது.

பணத்தை நல்லிணக்கத்திற்கு பயன்படுத்துகிறோம் என கூறிக்கொண்டு போர்க்குற்றம் தொடர்பில் சரியான பொறிமுறையை உருவாக்காமல் எப்படி நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என்று அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இருக்கிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நன்மைகளும் செய்யவில்லை , காணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. சிறையில் எத்தனையோ அரசியல் கைதிகள் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை உருவாக்க போகின்றீர்கள்?

முதலில் போர்க்குற்ற விசாரணைகளை உரிய முறையில் நடத்தினால் , மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என குறிப்பிட்டேன்.

அதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலர், பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் பொறிமுறை ஊடாகவே போர்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சென்ற முறை வந்த போதும் அரசாங்கத்திடம் கோரி இருந்தேன். இதுவரை காலமும் அதனை நீக்காது வைத்து இருப்பது அரசாங்கத்தின் பிழை எனவும்,  அதனை நீக்கும் போது குறித்த சட்டத்தின் கீழ் யார் யார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரி இருந்ததாகவும் கூறினார்.

போர் குற்ற விசாரணை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதனை ஏற்றுகொள்ள கூடிய பொறிமுறையாக இருந்தால்  தான்  அந்த பொறிமுறை மூலம் விசாரணை செய்யப்படும். அதற்கே ஐ.நா உதவிகளை வழங்கும் எனவும்  பான் கீ  மூன் குறிப்பிட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *