மேலும்

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

ravikaranயுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்ததாக வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், ராஜபக்ச காலத்தில் வடக்கில் உள்ள நிலங்களின் உறுதித்துண்டுகள் உறுதிகளாக மாற்றப்பட்டு புதிதாக நில உரிமையாண்மை வழங்கப்பட்டது. எனினும் உண்மையான நிலச் சொந்தக்காரர்களின் நில உரிமை புறக்கணிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: கொக்கிளாயில் உள்ள புத்த விகாரை மீதான சர்ச்சை தொடர்பான உண்மை நிலைப்பாடு என்ன? புத்த விகாரையின் பிரதம பிக்குவை அச்சுறுத்தியதாக தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தங்களது விளக்கம் என்ன?

பதில்: இப்புத்த விகாரையில் உள்ள பிரதம பிக்குவை அச்சுறுத்துவதற்கான அவசியம் எனக்கில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். 1981ன் பின்னரே தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் இங்கு குடியேற்றப்பட்டதாக அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் குடியேறியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை. 1980களிலேயே இவ்வாறான குடியேற்றங்கள் இடம்பெற்றதாகவும் சிங்களவர்கள் கொக்கிளாயிலேயே குடியேற்றப்பட்டதாகவும் அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே கொக்கிளாயில் விகாரையை அமைத்தவர்கள் இதற்கு முன்னர் அந்த இடத்தில் விகாரை ஒன்று இருந்தது என விவாதிக்க முடியாது. கொக்கிளாயில் விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் உறுதி என்னிடமும் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் திருஞானசம்பந்தர் ஆவார். தற்போது இவர் உயிருடனில்லை. இவரது மகனான திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ் நிலத்தின் உரிமையாண்மையைக் கொண்டுள்ளார். 2010ல் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பின்னர், மணிவண்ணதாஸ் தனது நிலத்தைச் சென்று பார்வையிடுதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக இவரது நிலமானது பௌத்த பிக்கு ஒருவரால் சட்டரீதியற்ற வகையில் சுவீகரிக்கப்பட்டது. கொக்கிளாய் முகாமிலுள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பையும் இப்பிக்கு பெற்றிருந்தார்.

மணிவண்ணதாசின் நிலத்தைச் சூழவும் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன, ஆனாலும் இவை அகற்றப்பட்டு விகாரையின் பிரதம பிக்குவால் இந்த நிலமானது சட்டரீதியற்ற வகையில் கையகப்படுத்தப்பட்டது. விகாரை அமைக்கும் பணி இடம்பெற்ற வேளையில், நான் அந்த இடத்திற்குச் சென்று பிரதம பிக்குவுடன் கதைத்தேன். நான் செல்லும் போதெல்லாம் எனக்கு காலக்கெடு வழங்கப்பட்டதே தவிர விகாரை அமைக்கும் பணி நிறுத்தப்படவில்லை. கொக்கிளாயில் வாழும் பெரும்பான்மைக் குடும்பங்கள் தமிழர்களே என்பதை நான் எடுத்துக்கூறியிருந்தேன். அந்த இடத்தில் உள்ள மக்களும் அதாவது இந்துக்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் என்கின்ற மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழர்கள் என்ற வகையில் இவர்கள் தமது இடத்தில் விகாரை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்துக்கள் அல்லது கத்தோலிக்கர்கள் வாழாத தென்னிலங்கையில் இந்து ஆலயங்கள் அல்லது தேவாலயங்கள் அமைக்கப்படுவதற்கு அங்கிருப்பவர்கள் அனுமதிப்பார்களா? கொக்கிளாயில் காலாதி காலமாக வாழும் தமிழ் மக்கள் தமது இடத்தில் விகாரை அமைப்பதானது அநீதியான செயல் எனத் தெரிவித்தனர். விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியானது நான்கு பேருக்குச் சொந்தமானதாகும். இது நான்கு ஏக்கர் நிலமாகும். ஒவ்வொரு ஏக்கரும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாகும். இதில் ஒரு ஏக்கர் நிலமானது கொக்கிளாய் கிராமிய வைத்தியாசலைக்குச் சொந்தமானதாகும். எனினும் வைத்தியசாலை அதிகாரிகள் 2011 தொடக்கம் இந்த விடயத்தில் அமைதி காத்து வருகின்றனர். ஆனால் மற்றைய நில உரிமையாளர்கள் தமது நிலமானது அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை கொண்டுள்ளனர். இதற்குச் சொந்தமான நில உரிமையாளர்கள் பிறரது இடங்களில் தங்கியுள்ளனர். 2010ன் பிற்பகுதியிலிருந்து இவர்கள் தமது சொந்த நிலங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலச் சட்டம் தொடர்பாக நன்கறிந்த அரச அதிகாரிகள் கூட இந்த விடயத்தில் அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்து அப்பாவிகளான நில உரிமையாளர்களுக்கு உதவவேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாகும். விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சூழ எந்தவொரு பௌத்த குடும்பங்களும் வாழவில்லை. கொக்கிளாய் கடல்நீரேரிக்கு அருகில் சில மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் வாழ்வாதாரத்திற்காக தென்னிலங்கையிலிருந்து இங்கு வந்தவர்களாவர். எனினும் இவர்கள் கத்தோலிக்கர்கள் ஆவர். இந்நிலையில் இந்தப் பகுதியில் விகாரை அமைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

நான் இனத்துவம் தொடர்பாகக் கதைக்கவில்லை. இது மிகப் பெரிய பிரச்சினையாகும். இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைiயை நாங்கள் தீர்க்க வேண்டும். விகாரை ஒரு தனியார் நிலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் உண்மையான பிரச்சினையைக் கதைக்கும் போது இது எவ்வாறு இனத்துவேசம் எனக் கூறமுடியும்?

கேள்வி: வடமாகாண சபையின் அமர்வுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பாக நீங்கள் தொடர்ந்தும் கேள்வி எழுப்புகிறீர்கள். இந்நிலையில் இது தொடர்பான தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகமானது ‘வெலிஓயா’ என்கின்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ்  கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகங்கள் உள்ளன. வெலிஓயா என்கின்ற பிரதேச செயலகத்தின் கீழ் பெரியளவில் குடும்பங்கள் காணப்படவில்லை.

ravikaran

எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலுமில்லாமல் வெலிஓயா பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கின் சில முக்கிய இடங்களும் வெலிஓயாப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னர் இந்த இடங்கள் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. 1981ல், 1000 ஏக்கர் திட்டம், கென்ற் பாம் திட்டம், டொலர் பாம் திட்டம் போன்ற சில திட்டங்களின் கீழ் நில அபகரிப்புக்கள் இடம்பெற்றன. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட நிலங்கள் வெலிஓயாப் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. இதில் தென்னிலங்கையர்கள் குடியேற்றப்பட்டனர்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டங்கேணி போன்ற இடங்களைச் சேர்ந்த 601 பயனாளிகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட வெலிஓயாப் பிரதேசத்திலுள்ள 2524 ஏக்கர் நெல்வயலானது வழங்கப்பட்டது. இந்தச் சம்பவமானது போருக்குப் பின்னான காலப்பகுதியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வழங்கப்பட்டது. வெலிஓயாவில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சவின் கையெழுத்துடன் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. வெலிஓயாவில் மட்டுமல்லாது, ஏனைய இடங்களிலும் சில சட்டரீதியற்ற குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அத்துமீறிய குடியேற்றத்திற்கு வெலிஓயா சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

கேள்வி: வாழ்வாதாரத்திற்காக கொக்கிளாய் கடல்நீரேரியில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமாகாண சபையைச் சேர்ந்த நீங்கள் மற்றும் உங்களது சக உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள். எனினும், இந்தப் பகுதியில் இந்த மீனவர்கள் நீண்ட காலமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. தங்களது குற்றச்சாட்டிற்கான காரணம் என்ன?

பதில்: கடல்நீரேரிற்கு அருகிலுள்ள 20 ஏக்கர் நிலமானது அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமானதாகும். இத்தனியார் நிலங்களுக்கு இவர்களே உரிமையாளர்களாவர். 1965ல் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், இந்தப் பகுதியில் உருவாக்கப்பட்ட மீன்வாடிகளில் 11 வாடிகள் தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமானதாகும். இதில் ஒன்று மட்டுமே தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்தது. இவர் ஒரு வர்த்தகர் ஆவார். இவர் தனது செல்வாக்கின் காரணமாக இந்த ஒரு வாடியைத் தனதாக்கியிருந்தார்.

தற்போது மத்திய அமைச்சின் நேரடி அனுமதியைப் பெற்றே தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் கொக்கிளாய் கடல்நீரேரியில் மீன்பிடிக்கின்றனர். ஆகவே இந்நிலையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மீனவ அமைச்சு மற்றும் மீனவத் திணைக்களம் போன்றவற்றின் செயற்பாடுகள் என்ன? தற்போது இந்த மீன்வாடிகள் அனைத்தும் தென்னிலங்கை மீனவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் காலாதிகாலமாக வாழும் தமிழ் மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

சிறிலங்காவிலேயே முல்லைத்தீவு மாவட்டமானது மிகவும் வறிய மாவட்டம் என உலக வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டமானது மீன்பிடியைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளமையே இதற்கான காரணமாகும். இதனால் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. இதேபோன்று இந்தப் பிரதேசத்தில் சட்டரீதியற்ற குடியேற்றங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வளங்கள் சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லை.

போர் முடிவடைந்த பின்னர், கொக்கிளாய் பிரதேசத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபட்டனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் இந்த இடத்தில் நிரந்தரமாகக் குடியேறியதால் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமானது பாதிக்கப்பட்டது. மீன்வாடிகளுக்குச் சொந்தமான 11 முதலாளிகளின் கீழ் தமிழ் மீனவர்கள் வேலை செய்தனர். தற்போது சட்ட ரீதியற்ற வகையில் கையகப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களைத் தருமாறு 200 வரையான கொக்கிளாய் வாழ் மீனவக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே 1981ல் வெளியிடப்பட்ட வர்த்தமானியானது வெற்றுக் காகிதமா?

கேள்வி: முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் அதிகூடிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன எனக் கருதுவதற்கான காரணம் என்ன?

பதில்: கடந்த 30 ஆண்டுகளில் நிலவிய காணிப் பிரச்சினைகள் சரியான முறையில் தீர்க்கப்படவில்லை. இந்த மாவட்டத்திலுள் பெரும்பான்மை நிலங்களின் உரிமையாளர்கள் காணி உறுதித்துண்டை மாத்திரமே வைத்திருக்கின்றனர். இதற்கான சரியான ஆவணப்படுத்தல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் நில அபகரிப்பில் ஈடுபடுவோர் போலி காணி உறுதிகளைத் தயாரித்து நிலத்தைச் சொந்தமாக்குகின்றனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் ஆதரவாக உள்ளனர்.

போர்க் காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்  சிறிலங்கா அரச நிர்வாகத்திலிருந்து முற்றிலும் விலகியிருந்தன. ஆனால் போர் முடிவடைந்த பின்னர், ராஜபக்ச காலத்தில் வடக்கில் உள்ள நிலங்களின் உறுதித்துண்டுகள் உறுதிகளாக மாற்றப்பட்டு புதிதாக நில உரிமையாண்மை வழங்கப்பட்டது. எனினும் உண்மையான நிலச் சொந்தக்காரர்களின் நில உரிமை புறக்கணிக்கப்பட்டது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் அமைந்திருந்த வெலிஓயாப் பிரதேசம் உருவாக்கப்பட்;டது. இந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் விவசாயமாக இருந்தது. வெலிஓயா உருவாக்கப்பட்டதன் பின்னர் இந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ராஜபக்ச காலத்தில் இந்த விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் தொகையைக் குறைப்பதற்கான பிறிதொரு திட்டமே மகாவலி அபிவிருத்தித் திட்டமாகும். பெரும்பான்மை சமூகமானது முல்லைத்தீவிலும் பெரும்பான்மை மக்களாக உருவாவதற்கு இது வழிவகுக்கும்.

வெலிஓயாப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தொடர்ந்தும் அனுராதபுர மாவட்டத்தின் கீழ் இருந்திருக்க முடியும். முல்லைத்தீவு மாவட்ட வயல்நிலங்களை அபகரித்து அதில் தென்னிலங்கை மக்களைக் குடியேற்றுவதானது சட்டரீதியற்றது என்பதை தற்போதைய அதிகரிகள் புரிந்துகொள்ளாமைக்கான காரணம் என்ன? முல்லைத்தீவு மக்களின் ஆதங்கங்களை இந்த அதிகாரிகள் புரிந்துகொள்ளாமைக்கான காரணம் என்ன?

இவ்வாறான சட்டரீதியற்ற குடியேற்றங்கள் நிறுத்தப்படாது. இது இன்னமும் ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை இடம்பெறும். இவ்வாறான நடவடிக்கைகள் தற்போது நாயாறுப் பிரதேசத்திலும் இடம்பெற்றுவருவது தொடர்பில் நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வழிமூலம்        – சிலோன் ருடே
ஆங்கிலத்தில்  – மிருதுளா தம்பையா
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *