மேலும்

அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம்

parliamentகூட்டு எதிரணியினரின் எதிர்ப்புகள், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரஅவசரமாக நிறைவேற்றப்பட்டது.

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்படும் என்றும், இந்த விவாதத்தின் முடிவில் இன்று மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியதும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்புப்பட்டிகளை அணிந்து கொண்டு, இந்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சபையை ஒத்திவைத்த சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர், சபை கூடியதும், நேற்றிரவு 9.30 மணிவரை விவாதம் நடத்துவது என்றும், இன்று காலை 11 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதற்கு கூட்டு எதிரணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த நிலையில், காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் மீதான விவாதத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைத்தார்.

இதன் மீது இரா.சம்பந்தன், பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் உரையாற்றிய போது, எதிரணியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய சபாநாயகர், கரு ஜெயசூரிய, சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

எனினும் நேற்றுப் பிற்பகல் இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட்டதுடன் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

காணாமற்போனோர் பணியகம் சிறிலங்கா படையினரைக் காட்டிக் கொடுக்கும் ஒன்று என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்ததுடன், அதற்கு கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளி்யிட்டு வந்தனர்.

சட்டரீதியாக உயர்நீதிமன்றத்தின் மூலம் இந்தச் சட்டமூலத்தைத் தடுக்க கூட்டு எதிரணியினர் முயற்சிகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக இந்தச் சட்டமூலம் நேற்று பிற்பகல் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *