மேலும்

யாழ்ப்பாண சம்பவங்கள் – ஒரு எச்சரிக்கை மணி

jaffna-violence- (2)இளையோர்கள் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வடக்கில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்குமான அவசியத்தையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழில் சுலோச்சனா ராமையா மோகன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

கடந்த வாரம் புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாண நீதிமன்றம் மற்றும் காவற்துறையினர் மீது ஆவேசங் கொண்ட இளைஞர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது. வித்யாவின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு நீதி வழங்குவதற்கு சிறிலங்காவின் நீதி முறைமை தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமானது இளையோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

இளையோர்கள் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வடக்கில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்குமான அவசியத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

போரின் பின்னான காலப்பகுதியில், வடக்கிலுள்ள இளைஞர்கள் தமக்கான பாதையைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். இதன் விளைவாக இந்த இளைஞர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்ற நிலை தோன்றியுள்ளது.

கஞ்சாவைப் புகைத்தல், போதைப்பொருட்கள் மற்றும் மிகமோசமான மதுபானங்களைப் பாவித்தல் போன்ற பல்வேறு இழிந்த செயற்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது.

நவீனமயமாக்கல் எவ்வித பொருத்தமான இலக்குமின்றி மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் தமது அதிகாரப் போட்டிகளுக்காக நலிவுற்ற மக்களைப் பயன்படுத்துகின்றனர்.

வேலையில்லாப் பிரச்சினை, இப்பிராந்தியத்தில் நிலவும் சரிவடைந்த பொருளாதாரம், புத்துணர்ச்சியை வழங்கக் கூடிய செயற்பாடுகள் நடைமுறையில் இல்லாமை, வழிகாட்டல் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகள் நாட்டில் போர் நிறைவுற்ற பின்னர் தமிழ் சமூகத்தின் மீது பாதிப்பைச் செலுத்தியுள்ளன.

‘இவ்வாறான குற்றச்செயல்கள் வடக்கில் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் பாவனை, விபச்சாரம், ஆபாசங்கள், அரசியல் சதிகள், இராணுவத்தினரின் பிரசன்னம், மக்களின் பணப்பரிமாற்றல் முறைமை இலகுபடுத்தப்பட்டிருத்தல் போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன’ என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரில் காணப்படும் ஐந்து திரையரங்குகளில் காண்பிக்கப்படும் திரைப்படங்கள் போன்றன இளைஞர்களின் மனங்களை வேறு திசையில் மாற்றுவதற்கு வழிவகுக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இரண்டு நாடக மன்றங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சிலரே ஆர்வமாகப் பங்கேற்கின்றனர்.

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் கைத்தொலைபேசிகளுக்கும் ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகியுள்ளனர்.  இணையங்களிலிருந்து ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்தல் மற்றும் கஞ்சா பாவித்தல் போன்றன முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளன.

கலாசார சார் செயற்பாடுகள் ஆதிக்கம் செலுத்தும் போது இவ்வாறான துர்நடத்தைகள் சமூகத்தில் ஒருபோதும் இடம்பெறமாட்டாது.

இளைஞர்கள் காலை தொடக்கம் மதியம் வரை அரட்டையடித்தவாறு பொழுதைக் கழிப்பதையும் மதிய உணவின் பின்னர் கடற்கரையில் இருந்தவாறு தம்மைக் கடந்து செல்வோருடன் வம்பிழுக்கின்ற காட்சிகள் இன்று ஒரு பொதுவான காட்சியாகக் காணப்படுகிறது.

இப்பத்தியின் எழுத்தாளர் அண்மையில் பருத்தித்துறைக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இளைஞர் குழு ஒன்றிடம் ஏன் அங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டபோது ‘செய்வதெற்கு எதுவுமில்லை. அதுதான் இங்கு நிற்கிறோம்’ என அந்த இளைஞர்கள் பதிலளித்திருந்தனர்.

போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் வாழும் பெண்கள் பாலியல் மற்றும் உடல்சார் சித்திரவதைகளுக்கும் வாய்மொழி மூலமான தவறான வார்த்தைகளுக்கும் உள்ளாகுகின்றனர்.

குடும்பத்தின் தலைமை விவசாயம், வர்த்தகம் அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபட அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இளையோர்கள் தமக்கான அடிப்படைக் கல்வியை முடித்த பின்னர் தமது நேரத்தை இவ்வாறான மோசமான காரியங்களுக்காகச் செலவழிக்கின்றனர்.

‘போருக்குப் பின்னர் ஓய்வெடுத்தல் அல்லது சமாதானத்தின் பயன்களை அனுபவித்தல் என்பது தற்போதும் தொலைதூரக் கனவாகவே உள்ளது’ என நாடகக் கலைஞரும் தொன்மைக்கால கலைகளின் தொலைநிலைக் கல்விக்கான இயக்குனருமான பாசையூரைச் சேர்ந்த வசந்த் தெரிவித்தார்.

1965ல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையமானது தமிழ் சமூகத்தின் பாரம்பரிய கலைகளை சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறது. மோதலுக்கான தீர்வு, ஆற்றுப்படுத்தல் மற்றும் பல்வேறு இன மற்றும் மதப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் மத்தியில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் பரஸ்பர கூட்டுறவை அதிகரிப்பதற்குமான பணிகளை முன்னெடுப்பதே இந்த மையத்தின் நோக்காகும்.

‘எமது நாடகங்கள் மூலம் வன்புணர்வு தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்குதல், பெண்களை மதித்தல், அறநெறிகளைப் பின்பற்றுதல் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் வழங்குகின்றோம். எனினும் இது மட்டும் போதாது. இதற்கப்பால் இன்னமும் செய்யவேண்டியுள்ளது’ என வசந்த் தெரிவித்தார்.

கலாசாரச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், இசை நிகழ்வுகள், நடன நிகழ்வுகள் மற்றும் நாடகங்கள் போன்றவற்றில் இளையோர்களைப் பங்குபற்ற வைத்தல் போன்றன இளையோர்களின் வாழ்வில் சுவாரசியத்தை வழங்கும் என வசந்த் மேலும் குறிப்பிட்டார்.

மணமக்களைத் தேடுவதற்காக வடக்கிற்கு வரும் புலம்பெயர் தமிழ் இளையோர் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டு பின்னர் மேற்குலக நாடுகளில் வதியும் தமது பெற்றோர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை எனத் தெரிவித்து அந்தப் பெண்களைக் கைவிடுகின்ற நிலை யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ளது.

ஒரு சில மாதங்களின் முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறான நடத்தைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

‘எமது இளையோர்கள் புலிகளின் ஆட்சிக்காலத்தில் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் போர் முடிவடைந்த பின்னர் இந்த இளைஞர்கள் தற்போது சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். இவர்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த மிருகம் இவர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்திய பின்னர் வெளிப்படுகின்றது. இதுவே பல்வேறு குற்றங்களுக்குக் காலாக அமைந்துள்ளது’ என, ஒன்பது பேரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட வித்யா என்கின்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு போதைப்பொருட் பாவனையும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிற்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த புங்குடுதீவு வாசி ஒருவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் வித்யாவின் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளார் எனவும் இவர் வித்யா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முழுக் காட்சிகளையும் காணொளியில் பதிவு செய்து அதனை விற்பதற்கு முயற்சித்துள்ளார் எனவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளார்.

போரின் பின்னர் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் முதலமைச்சர் குற்றம்சுமத்தியுள்ளார். விபச்சாரமும் அதிகரித்துள்ளது. போரில் தமது கணவன்மாரை இழந்த இளம்பெண்களே விபச்சாரங்களில் அதிகளிவில் ஈடுபடுகின்றனர்.

ஆபாசப்படங்கள் மற்றும் தொலைபேசிகள் போன்றன தங்குதடையின்றி பயன்படுத்தப்படுகின்றன. இராணுவத்தினரும் காவற்துறையினரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுடன் அந்நியோன்யமாகப் பழகுகின்றனர்.

‘இவை எதனையும் 2009ற்கு முன்னர் காணமுடியாது. சிற்றின்பங்களில் இளைஞர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஆயுதங்களை மீளவும் தூக்குவதிலிருந்து தடுப்பதற்கான ஒரு உத்தியாகவே திட்டமிட்ட ரீதியில் கையாளப்பட்டுள்ளது. அதாவது இளைஞர்கள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனக் கோருவதற்கோ முன்வராது தடுப்பதற்காகவே சிற்றின்ப செயற்பாடுகள் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இதன் பின்னர் இவர்களால் எவ்வாறு தமிழர்களுக்காக நீதி கோரமுடியும்?’என முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியல்வாதிகள் தமது சுயநல நோக்கங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்துவதாகவும் முதலமைச்சர் குற்றம்சுமத்தியுள்ளார்.

‘வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுறும் வரை எமது அரசியற் கட்சிகள் சில சிறப்பாகச் செயற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவர்கள் தமது உண்மையான முகத்தைக் காண்பிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சிவில் நிர்வாகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான செயற்பாடுகளை இந்த அரசியற் கட்சிகள் முன்னெடுக்கின்றன’ என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் அதாவது வீடுகளை எரித்தல் மற்றும் கற்களை வீசுதல் போன்றவற்றுடன் இராணுவப் புலனாய்வும் ஈ.பி.டி.பியும் ஈடுபட்டிருந்தன என்பதை காணொளிகள் மூலம் நிரூபிக்க முடியும்.

‘புலம்பெயர் தமிழ் மக்களால் தமது உறவுகளுக்காக அனுப்பப்படும் நிதியானது இங்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணம் இவர்களின் கற்கைகளுக்காக மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. எமது இளைஞர்களின் இன்றைய கனவாக வெளிநாடுகளுக்குச் சென்று சொகுசாக வாழ்தல் மட்டுமே காணப்படுகிறது. இதேவேளையில் சிலர் குற்றங்களைச் செய்துவிட்டு இங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்’ என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்த பின்னர் வடக்கிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் அதிகளவான மக்கள் காணப்படவில்லை. மத்திய கல்லூரியில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் சச்சரவின் பின் தற்போது மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேறெங்கும் விளையாட்டுக் கழகங்கள் காணப்படவில்லை.

பகல் நேரத்தில் யாழ்ப்பாண நகரம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஆனால் பி.ப ஆறு மணிக்குப் பின்னர் அனைத்துச் செயற்பாடுகளும் முடிவுக்கு வருகின்றன. இதன் பின்னர் இங்கு எவ்வித செயல்களிலும் ஈடுபட முடியவில்லை என தன்னை அடையாளங் காண்பிக்க விரும்பாத முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

‘எமது கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு என்னால் முடிந்தவரை நான் பாடுபட விரும்புகிறேன்’ என இச்சாரதி தெரிவித்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் தமது உடைமைகளை இழந்து வாழ்கின்றனர். இவர்கள் தமது வாழ்வை அனுபவிப்பதற்கான மகிழ்ச்சியான மனநிலையைக் கொண்டிருக்கவில்லை.

கல்வியானது மனிதர்களுக்கு முதன்மையான மற்றும் தேவையான சிந்தனையைத் தூண்ட உதவுவதாக கல்விமான்கள் கூறுகின்றனர். எனினும், இளைஞர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கான பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உறவைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உண்டு.

இதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் வடக்கிலுள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே இளைஞர்கள் காத்திரமான வாழ்வொன்றைத் தெரிந்தெடுப்பதற்கான தமது ஆக்கபூர்வ உதவிகளை வழங்குகின்றன.

இந்நிலையில் தமிழ் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினை ஆபத்தாக உள்ளது. ஏனெனில் இளையோர்களால் எதிர்நோக்கப்படும் இவ்வாறான ஆபத்தான காரணிகள் பல்வேறு தொடர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

வித்யா மீதான வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 130 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டடத்திற்குள் நின்ற இளைஞன் ஒருவனை வெளியில் வருமாறு அழைத்த காவற்துறை அவரைத் தெருவில் வைத்துத் தாக்குகின்ற சம்பவமானது காணொளி ஒன்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டதானது இளைஞர்கள் மத்தியில் குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளதுடன் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘இதேபோன்ற ஒரு நிலைமையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவற்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டியிருந்தனர்’ என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களுக்கான முன்னாள் புலி உறுப்பினர்களே விசாரணை செய்யப்படுகின்றனர். இவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வரும்போது தொழில் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

வடக்கில் சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படும்போது இங்கு தொழில் வாய்ப்பு அதிகரிக்கப்படும். இதற்கான திட்டங்கள் வரையப்பட வேண்டும். தெற்கிலுள்ளவர்களே வடக்கில் இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வடக்கிலுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட பணிகளை வழங்கும் போது இது சுற்றுலாத்துறையையும் முன்னேற்றமடையச் செய்யும்.

யாழ்ப்பாணத்திலும் பல்வேறு கடற்கரைகள், பனைமரங்களைக் கொண்ட இடங்கள், கோயில்கள் போன்ற பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த இடங்கள் காணப்படுவதால் இவற்றை உள்ளடக்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் இவற்றுடன் தொடர்புபட்ட பணிகளில் வடக்கில் வாழும் வேலையற்ற இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

போர் முடிவடைந்ததானது சமாதானம் ஏற்பட்டு விட்டது என்பதற்கான அறிகுறி அல்ல.

அரசியல்வாதிகளால் தீர்வுகாணமுடியாத சில முக்கிய பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்தித் தீர்வுகாண்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். ஆகவே இதற்கான காத்திரமான, ஆக்கபூர்வமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *