மேலும்

சொந்த வீடுகளுக்குச் செல்ல ஏக்கத்துடன் காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்

JAFFNA-distroy-homeயாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளை வீமன்காமம் பகுதியிலுள்ள வி.யோகேஸ்வரனின் காணி மற்றும் வீடு போன்றவற்றை சிறிலங்கா இராணுவம் மீளக்கையளித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் தனது சொத்துக்கள் தன்னிடம் மீண்டும் கிடைத்துவிட்டன என்பதை இவரால் நம்பமுடியவில்லை.

1990 யூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக யோகேஸ்வரனும் அவரது குடும்பத்தவரும் தமது சொந்த இடமான வீமன்காமத்திலிருந்து இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர், வீமன்காமத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதனால் மக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர்.

அரசாங்க வைத்தியரான யோகேஸ்வரன் தனது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் கச்சதீவுக்கு அருகிலுள்ள நெடுந்தீவில் வைத்தியராகப் பணியாற்றினார். 1980களின் நடுப்பகுதியில், சிறிலங்காவிலுள்ள வழக்காறின் படி வைத்திய கலாநிதி யோகேஸ்வரனுக்கு சீதனமாக பளை, வீமன்காமத்தில் நிலம் ஒன்று வழங்கப்பட்டது.

‘1988ல் நாங்கள் இந்த நிலத்தில் வீடொன்றை நிர்மாணித்தோம். நான் ஒரு சில இரவுகள் தான் இந்த வீட்டில் கழித்திருப்பேன். ஏனெனில் நான் தொழில் நிமித்தம் வெளியிடங்களில் தங்கவேண்டியிருந்தது. நான் நீண்ட காலத்தை யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே கழித்துள்ளேன்’ என யோகேஸ்வரன் கடந்த கால நினைவுகளை மீட்டினார்.

JAFFNA-distroy-home

இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பளை வீமன்காமத்திற்கு வெளியாட்கள் எவரும் செல்ல முடியாது. கடந்த காலத்தில், வீமன்காமத்திலிருந்து சில கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குச் செல்லும்போது வைத்திய கலாநிதி யோகேஸ்வரன் தனது மகள் மற்றும் மகனிடம் தமது குடும்பத்திற்குச் சொந்தமான காணி மற்றும் வீடு உள்ள வீமன்காமம் இருக்கின்ற திசை நோக்கிச் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் வீமன்காமத்திலிருந்து இடம்பெயர்ந்தபோது யோகேஸ்வரனின் மகன் மற்றும் மகள் ஆகியோர் மிகவும் சிறியவர்களாக இருந்தனர்.

இவர்களுடைய வீடானது தற்போது தங்குவதற்குரிய நிலையில் காணப்படவில்லை ஆயினும் வைத்தியர் யோகேஸ்வரன் மீண்டும் தமது சொந்த வீட்டைப் பார்வையிடுவதில் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளதாகக் கருதுகின்றார். மற்றையவர்களைப் போலல்லாது, இவரது வீட்டின் கூரையாவது எஞ்சியுள்ளது.

பளை வீமன்காமத்திற்குத் திரும்பியுள்ள கதிரேசன் இவ்வாறான ஒரு நல்வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. இவர் பல ஆண்டுகளின் பின்னர் தனது சொந்த இடத்திற்குச் சென்ற போது அங்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. இவரது அழகிய வீடு தரைமட்டமாக அழிக்கப்பட்டிருந்தது. இவரது வீட்டிற்கு அருகிலிருந்த இவரது மைத்துனியின் வீடு முற்றுமுழுதாக உடையவில்லை. ஆனால் அந்த வீடு கூரையைக் கொண்டிருக்கவில்லை.

வைத்தியர் யோகேஸ்வரன் போன்று கதிரேசன் வசதியுடன் வாழவில்லை. இவர் ஒரு மேசன். ‘நான் தினசரி வேதனத்தை நம்பி வாழ்கிறேன்’ என கதிரேசன் கூறினார். இவரால் இனி புதியதொரு வீட்டைக் கட்டுவதற்கான பொருளாதாரப் பலம் இல்லை. கடந்த ஆண்டுகளில் வீடு கட்டுவதற்குத் தேவையான வளங்கள் மற்றும் கூலி போன்றவற்றில் விலை மிகவும் அதிகரித்துள்ளது. வீடொன்றைப் புதிதாகக் கட்டுவதற்குத் தேவையான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கதிரேசன் எவ்வித தெரிவையும் கொண்டிருக்கவில்லை.

இந்திய அரசாங்கத்தின் கீழ் சிறிலங்காவில் ஈழப்போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்துக் கொடுக்கப்படும் 550 சதுர அடி வீடொன்றை நிர்மாணிப்பதற்கு 5.5 லட்சம் சிறிலங்கா ரூபாக்கள் போதுமா என வினவிய போது, ‘இல்லை. இந்த நிதி போதாது. குறைந்தது 7.5 லட்சம் சிறிலங்கா ரூபாக்களாவது தேவை’ என கதிரேசன் கூறினார்.

இதுபோன்ற பல பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இராணுவத்தால் நிலங்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இன்னமும் விடுவிக்கப்படாத நிலங்களும் காணப்படுகின்றன. அதாவது வைத்திய கலாநிதி யோகேஸ்வரனின் சொந்தக் காணி உள்ள பளை வீமான்காமத்தில் 110 ஏக்கர் நிலம் மட்டுமே அதன் சொந்தக்காரரிடம் வழங்கப்பட்டுள்ளன. மீதி 115 ஏக்கர் நிலங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இதற்கப்பால், பளை வீமன்காமம் மற்றும் வறுத்தலைவிளான் போன்ற இடங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

25 ஆண்டுகால யுத்தத்தின் விளைவாக 10 தடவைகள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக வறுத்தலைவிளானைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கணேசன் கூறுகிறார். வீடுகளை மட்டும் புனரமைப்பது மாத்திரமன்றி இடம்பெயர்ந்த மக்களினுடைய வாழ்வை மீளக்கட்டியெழுப்ப வேண்டியதும் சவால் நிறைந்த விடயமாகக் காணப்படுகிறது.

வைத்திய கலாநிதி யோகேஸ்வரன், கதிரேசன் மற்றும் கணேசன் போன்றவர்கள் தமது வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் சுமூகமான எதிர்காலத்துடனும் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஆங்கிலத்தில் – ரி.ராமகிருஸ்ணன்
வழிமூலம்       – தி ஹிந்து
தமிழாக்கம்      – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *