மேலும்

கோத்தாவைப் பாதுகாக்கும் மகிந்த நியமித்த நீதியரசர்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Supreme Courtமகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

2004ல் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சந்திரிகாவிற்கு பலம் கொடுத்தது சிறிலங்காவின் நீதிச் சேவையாகும்.

ஒரு ஆண்டின் பின்னர் சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தடைவிதித்த 18 (ஏ) திருத்தச் சட்டமானது உச்சநீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, இந்த நோக்கத்தை அடைவதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கருத்து வாக்கெடுப்பு தேவை என அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.

இதனால் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.  இதன் பெறுபேறாக, ரணில் அரசாங்கம் தோல்வியுற்றது.

இதன்பின்னர், நீதிச்சேவையால் முன்வைக்கப்பட்ட சில தீர்ப்புக்கள் ரணில் அரசாங்கத்திற்கு எதிராக அமைந்தது. இறுதியில், ரணிலின் அரசாங்கத்திலிருந்த மூன்று அமைச்சுக்களை சந்திரிகா பொறுப்பெடுத்த போது, உச்சநீதிமன்றம் சந்திரிகா ஆட்சி செய்வதற்குச் சார்பான தீர்வை முன்வைத்தது.

சரத் என். சில்வா பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் அதிபர் சந்திரிகாவுக்குச் சார்பாக தீர்ப்புக்களை முன்வைப்பதாக பொது அமைப்புக்களும் சுயாதீன ஊடக அமைப்பும் குற்றம்சுமத்தின. இதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி சில்வாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்க முனைந்தது.

2001 பொதுத்தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், சரத் என் சில்வா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சந்திரிகாவால் மூடிமறைக்கப்பட்டது.

2001 பொதுத்தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சி, சந்திரிகாவை இலக்கு வைத்தும், சரத் என் சில்வா மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்குமான மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளும் விதமான பரப்புரைகளை மேற்கொண்டது.

இத்தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்ற போதிலும், சரத் என் சில்வாவைப் பதவியிலிருந்து விலக்கும் நடவடிக்கைகளை ரணில் முன்னெடுக்கவில்லை. இறுதியாக, ரணிலின் அரசாங்கத்தைக் கலைப்பதற்கான பலத்தை சரத் என் சில்வாவும் அவரது சபையும் சந்திரிகாவுக்கு வழங்கின.

கடந்த காலத்தில் இவ்வாறான ஒரு கசப்பான பாடத்தைக் கற்றுக் கொண்டவரான, தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் அரசாங்கத்தை அமைத்துள்ள, ரணில் இத்தடவை தான் பதவிக்கு வருவதற்கு முன்னர் பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிசைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனத் தீர்மானித்திருந்தார்.

கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மகிந்த அரசாங்கத்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மகிந்தவால் மொகான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவமானது மொகானின் நியமனம் சட்டரீதியனதல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மொகான் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சிராணியை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் எனக் கருதப்பட்டது.

மைத்திரியும் ரணிலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமது தேர்தல் பரப்புரைகளில் சிராணியை பிரதம நீதியரசராக நியமிப்போம் என வாக்குறுதியளித்திருந்தனர். இது மைத்திரியின் தேர்தல் விளக்கவுரையிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

சிராணி பண்டாரநாயக்க தனது பதவியிலிருந்து மதிப்புடன் ஓய்வுபெறுவதற்குக் காணப்பட்ட தடைகளை மைத்திரி அரசாங்கம் நீக்கிய அதேவேளையில் புதிய பிரதம நீதியரசராக சிறி பவான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மையாகும்.

ரணில் அரசாங்கத்தினால் சில காலம் வரையாவது சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராகப் பதவிவகிப்பதற்கான அனுமதி வழங்கப்படாததானது அநீதியான ஒரு செயலாகவே கருதப்படுகிறது.

தற்போது சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் ரணில் அரசாங்கத்திற்கு சாதகமற்ற தீர்ப்பொன்றை அறிவித்துள்ளது.

அதாவது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவையும் இவர் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு ஐந்து மாதங்களின் பின்னரே விசாரணை செய்யப்படும் எனவும் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோத்தபாய மீதான சிறிலங்கா காவற்துறையின் நிதி மோசடி விசாரணையானது சட்ட ரீதியற்றது எனவும் இவரது சட்டவாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கம் சிறிலங்கா காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ஊடகவே விசாரணைகளை மேற்கொள்கிறது.

நாடாளுமன்றில் 19வது திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்ட போது, காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்படுமாயின் தாங்கள் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் என மகிந்தவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயமும் மகிந்த-மைத்திரி அண்மைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இப்பரிந்துரையை மைத்திரி நிறைவேற்றவில்லை.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உத்தரவாதமளித்தே மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் ஏறியது. இதனால் நிதி மோசடி விசாரணைப் பிரிவைக் கலைப்பதற்கான உறுதிமொழியை தற்போதைய அரசாங்கத்தால் வழங்க முடியாது.

ஏற்கனவே செயற்படுகின்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மகிந்தவுக்கு ஆதரவானவர்கள் இருக்கலாம் என்பதால் இப்பொறிமுறையைத் தொடர்ந்தும் பயன்படுத்துவது தொடர்பில் மைத்திரி மற்றும் ரணில் தயக்கம் கொண்டிருக்கலாம்.

ஆகவே, இவர்கள் இதற்கான புதிய பிரிவொன்றை உருவாக்கத் தீர்மானித்திருந்தனர். ஆரம்பத்தில், இந்தப் பிரிவானது நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை மட்டும் திரட்டியது. இந்தக் கட்டத்தில் இப்பிரிவு தவறிழைத்த எவரையும் கைதுசெய்யவில்லை.

ரணிலுடன் இணைந்து மைத்திரி அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்களித்த மக்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்வதில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் அதிருப்தியடைந்தனர். இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுகின்றது என்பதை மைத்திரியும் ஏற்றுக்கொண்டார்.

இதில் மேலும் தாமதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இதனுடன் தொடர்புபட்ட அதிபர் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. மோசடிகளில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய முடியுமா என மைத்திரியின் சில கூட்டாளிகள் வினவினர்.

எனினும், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவானது தனது ஆரம்ப கட்ட விசாரணைகளை முடித்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்த போது மக்கள் அதனை வியந்து பார்த்தனர். ஆனால் மகிந்தவின் விசுவாசிகளுக்கு இது தலையிடியாக மாறியது.

ஆரம்பத்தில் இவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அச்சுறுத்துவதற்காக இதன் அலுவலகத்திற்கு முன்னாள் நின்றவாறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் பின்னர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவைக் கலைக்குமாறு மைத்திரிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். இந்த முயற்சிகள் தோல்வியுற்ற போது, உச்ச நீதிமன்றை நாடுவதென மகிந்தவின் விசுவாசிகள் தீர்மானித்தனர்.

இலஞ்ச ஊழல் செயற்பாடுகளால் நாட்டு மக்கள் மகிந்த அரசாங்கத்தை வெறுத்தனர். இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு மக்கள் மைத்திரிக்கு ஆணை வழங்கினர். தற்போது, ஊழல்களில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, காலி மிதக்கும் ஆயுதக்களஞ்சியம், மிக் விவகாரம், லங்கா வைத்தியசாலைகள் தொடர்பில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அறிவித்தது.

இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ய முயன்றபோது, உச்ச நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது. இதன்மூலம் கோத்தபாய விசாரணைகளிலிருந்தும் கைதுசெய்யப்படுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளார். இது ஒக்ரோபர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது, மைத்திரி-ரணில் அரசாங்கம் காலி மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், மிக் விவகாரம் மற்றும் லங்கா வைத்தியசாலைகள் மீதான ஊழல் குற்றங்கள் தொடர்பில் மக்களுக்கு எவ்வாறான பதிலைக் கூறமுடியும்?

இவற்றை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாகக் கூறமுடியுமா? குற்றவாளிகளைப் பிடித்துத் தருமாறு நீதிமன்றிடம் தற்போதைய அரசாங்கம் கேட்க முடியுமா? அல்லது தன்னால் எதுவும் செய்ய முடியாது என அரசாங்கத்தால் கூறமுடியுமா?

சந்திரிகாவின் நிறைவேற்று அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் 2002ல் அரசாங்கம் ஒன்றை உருவாக்கினர். ஆனால், தனது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் மூலம் சந்திரிகா தனக்கான பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்.

இத்தடவை, மகிந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்களைக் கைதுசெய்து தண்டனை கொடுப்பதற்கான ஆணையை மக்கள் மைத்திரியிடம் வழங்கியுள்ளனர்.

புதிய அரசாங்கத்தால் குற்றவாளிகளைக் கைதுசெய்யும் செயற்பாடுகளை முடக்குவதற்காக மகிந்தவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச, மகிந்தவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவைக் கொண்ட உச்ச நீதிமன்றிடம் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கோத்தபாயவுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மகிந்த மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்ச நீதிமன்றமே தற்போது கோத்தபாயவைப் பாதுகாத்துள்ளது.

ஆனால் மகிந்த மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவி வகிக்க முடியாது என்கின்ற தீர்ப்பை மக்கள் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் மூலம் முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *