மேலும்

“கோத்தாவின் வங்கிக்கணக்கு அரசியலமைப்பு மீறல்” – முன்னாள் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

gotaஅரசாங்கப் பணத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

திறைசேரிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் ரூபாவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தனியான வங்கிக்கணக்கில் வைத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய பாதுகாப்புத் தலைமையகத்தை அமைப்பதற்காகவே இந்தப் பணத்தை, தனியான கணக்கில் வைத்திருந்ததாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, தனியான வங்கிக்கணக்கில் வைத்திருப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் எஸ்.சி.மாயாதுன்ன-

”அரசியலமைப்பின் படி, நாட்டின் நிதியை கையாள்கின்ற முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது,

அரசியலமைப்பின் 149-(1) பிரிவின் இன் படி, அரசுக்கு வருகின்ற எந்தவொரு வருமானமும் திறைசேரியின் பொதுநிதியத்தில் சேரவேண்டும்.

நாடாளுமன்றத்தால் வழங்கப்படுகின்ற சிறப்பு அனுமதியின் படி மட்டுமே வேறு கணக்குகளில் அரச நிதியை வைத்திருக்க முடியும்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அப்படியான அனுமதியைக் கொடுத்திருக்காவிட்டால், அரசுக்கு வரவேண்டிய பணத்தை வேறு கணக்கில் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

அமைச்சரவையினால் இந்த அனுமதியைக் கொடுக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த அனுமதியின்படி வேறு ஒரு நிதியத்தின் கீழோ அல்லது கணக்குக்கோ இந்தப் பணத்தைக் கொண்டு வந்திருக்க முடியும்.

இல்லாவிட்டால் இந்த எல்லாப் பணமும் பொது அரச நிதியத்தின் கீழேயே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் சட்டம். அதனை மீறுவது அரசியலமைப்பு மீறல் தான்.

நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்துக்கு முரணாக அமைச்சரவையால் செயற்பட முடியாது.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின்படி, நீதிமன்றத்தின் ஊடாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் பெறும்போதும் நாடாளுமன்றத்தின் அனுமதியை அரசாங்கம் பெறுவது அவசியம்.

குறிப்பாக, அரசு கடன் மற்றும் உதவிகளைப் பெறும்போதும் நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம்.

இந்த அனுமதியின்றி பல பில்லியன் கணக்கான கடன் நிதி கையாளப்பட்டிருப்பதாகத் தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதனால், அரசியலமைப்புக்கு உட்படாத வகையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் நடந்துள்ளன என்பதை மறுக்க முடியாத நிலை தான் இங்கு இருக்கின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *