மேலும்

இந்தியாவும் சிறிலங்காவும் கொலணித்துவத்திற்கு பின்னான அரசியல் பண்புகளில் மாற்றத்தை கொணர்வார்களா?

maithriகொலனித்துவத்திற்குப் பின்னான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த அரசியலைப் பயன்படுத்தி இவர் தொடர்ந்தும் ஆட்சிசெய்ய வேண்டுமா அல்லது இந்த ஆட்சியையும் கடந்த பத்தாண்டாக நடைமுறையிலுள்ள மிகக் கொடிய அரசியலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்பது மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னுள்ள வரலாற்று சார் கேள்வியாகும்.

இவ்வாறு The Globe and Mail ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் DOUG SAUNDERS தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இந்தியாவின் தெற்கிலுள்ள அழகிய தீவான சிறிலங்காவுக்கு பாரசீகர்கள் ‘செரண்டிப்’ என்கின்ற பெயரை இட்டதன் மூலம் செரண்டிப்பிற்றி என்கின்ற வார்த்தை உருவாகியது. சிறிலங்காத் தீவானது நீண்ட காலத்திற்கு முன்னர் போர்த்துக்கேயரால் ஆளப்பட்ட போது இது Ceilão  எனவும் அழைக்கப்பட்டது. இதன் பின்னர் ஒல்லாந்தரின் கொலனித்துவ ஆட்சியின் போதும், ஆங்கிலேயரின் ஆட்சியின் போதும் இத்தீவானது சிலோன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1948ல் சிறிலங்கா கொலனித்துவப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்தபோது சிறிலங்கா என்கின்ற பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாறான வரலாற்றுச் சம்பவத்துடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டு சிறிலங்காவில் எதிர்பார்க்கப்படாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நீண்ட காலமாக சிறிலங்காவின் அதிபராகப் பணியாற்றிய மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளார். இதன்பின்னர் இவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டவரும் 51.3 சதவீத வாக்குகளைப் பெற்றவருமான மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த மாற்றம் சிறிலங்காவில் அமைதி மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதைச் சுட்டிநிற்கிறது. எவரும் இத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. தமிழ் பேசும் மக்களுக்காகப் போரிட்ட பிரிவினைவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரை வெற்றிகொண்ட திரு.ராஜபக்ச சிறிலங்காத் தீவை ஒரு பௌத்த பேரினவாதியாக இருந்து ஆட்சிபுரிந்துள்ளார். இவர் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன்வசம் வைத்திருந்தார்.

சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன வரலாற்று ரீதியான தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய நிலையிலுள்ளார். கொலனித்துவத்திற்குப் பின்னான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த அரசியலைப் பயன்படுத்தி இவர் தொடர்ந்தும் ஆட்சிசெய்ய வேண்டுமா அல்லது இந்த ஆட்சியையும் கடந்த பத்தாண்டாக நடைமுறையிலுள்ள மிகக் கொடிய அரசியலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்பது மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னுள்ள வரலாற்று சார் கேள்வியாகும்.

ருனிசியா, கம்போடியா, பங்களாதேஸ் மற்றும் தென்னமெரிக்காவின் பெரும் பாகங்களில் நாங்கள் கண்டுள்ள கொலனித்துவத்திற்குப் பின்னான அரசியல் அதிகார ஆட்சி சிறிலங்காவில் அதிகரித்துள்ளது. சிறிலங்கா, இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் இத்தகையதொரு தெரிவு காணப்படுகிறது.

திரு.ராஜபக்ச தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டாரா அல்லது தேர்தல் தின இரவன்று கலகம் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டாரா என்பது இங்கு உண்மையில் ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஆனால் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையும் இராணுவமும் இவருக்கு எதிராகத் திரும்பியமை என்பது ஒரு பெரிய விடயமாகும்.

தமிழ் பேசும் மக்களினதும், கத்தோலிக்கர்களினதும், இந்துக்களினதும் மற்றும் முஸ்லீம்களினதும் ஆதரவுப் பலத்துடன் அதிபராகப் பதவியேற்றுள்ள திரு.சிறிசேனவை ஆதரிப்பதென இலங்கையகர்களும் அவர்களுடைய நிறுவகங்களும் தீர்மானித்தன.

திரு.ராஜபக்ச எதனைச் செய்ய வேண்டுமெனத் தேர்ந்தெடுத்தார் என்பதும் இவரைப் பின்தொடர்ந்து தற்போது ஆட்சியிலுள்ள புதிய அதிபர் எதனைப் பின்பற்றித் தனது ஆட்சியை மேற்கொள்ளவுள்ளார் என்பதும் கொலனித்துவத்திற்குப் பின்னான அரசியலை முதன்மைப்படுத்தியதாகும்.

20ம் நூற்றாண்டில், ஆசிய, ஆபிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகள் தமது சுதந்திரத்தை வென்றெடுத்த போது, உலகில் புதிய, சுதந்திர ஜனநாயக அரசியலில் முதன் முதலாக அதீத நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாடுகள் தமது கலாசாரத்தைப் பின்பற்றி கொலனித்துவத்திற்குப் பின்னான ஆட்சியை மேற்கொண்டனர்.

கொலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பல நாடுகள் கொம்யூனிசக் கருத்தியல்களை முற்றிலும் தமது அரசியலுக்குள் உட்புகுத்திக் கொண்டனர். இதற்கு கியூபா மற்றும் ரன்சானியா போன்ற நாடுகள் எடுத்துக்காட்டாகும்.

இதேபோன்று வலதுசாரி அதிகாரத்துவ ஆட்சி இடம்பெற்ற சிலி, தென்னாபிரிக்கா போன்றனவும் கொலனித்துவத்திற்குப் பின்னான ஆட்சிக்காலத்தில் அந்தந்த நாடுகள் தமது கலாசார வடுக்களை ஈடுசெய்வதற்கேற்ற அரசியலைப் பின்பற்றினர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

சில நாடுகள் அதாவது சீனா போன்ற நாடுகள் ஒற்றையாட்சி நாடுகளாகவும், ஆபிரிக்கா நாடுகள் பலம்மிக்க வம்சாவளி ஆட்சி மேற்கொள்ளப்படும் நாடுகளாகவும் காணப்படுகின்றன. ஆகவே இந்த நாடுகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் கொலனித்துவ கால ஆட்சிச் சாயலைக் கொண்டுள்ளன.

1989 இற்குப் பின்னான கொலனித்துவத்திற்குப் பின்னான ஆட்சிக்காலமானது இன அரசியல் மற்றும் மதம் போன்றவற்றை முதன்மைப்படுத்தியுள்ளது. கொலனித்துவத்திற்குப் பின்னான சர்வாதிகாரிகள் தமது பலசாலி ஆட்சியானது இன மற்றும் மத தீவிரவாதத்திற்கு பதிலிடையாக உருவாக்கப்பட்டதாக நியாயப்படுத்தினார்கள். சிறிலங்காவின் பௌத்த அடிப்படைவாதமும் இத்தகையதொரு கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பிரித்தானிய கொலனித்துவவாதிகளின் கீழ் சிறுபான்மைத் தமிழ் மக்கள் வரவேற்கப்பட்ட ஒரு இனக்குழுமங்களாகக் காணப்பட்டனர். சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர், சிங்களம் பேசும் சிங்களப் பெரும்பான்மையினர் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.  இதனால் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் தமிழ் சிவில் உரிமை அமைப்பானது மாவோ சேதுங்கை வழிகாட்டியாகக் கொண்டு போராட்டத்தை ஆரம்பித்தது. இது பின்னர் மிகக் கொடிய யுத்தமாகப் பரிணாமம் பெற்றது. தமிழ்ப் போராளிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பிரபலம் பெற்றுள்ளனர்.

தற்போது, திரு.ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் காணப்பட்ட பௌத்த அடிப்படைவாதமானது மியான்மார், தாய்லாந்து மற்றும் சிறிலங்காவின் ‘பௌத்த பிறை’ ஆட்சியை வேறொரு திசைக்குக் கொண்டு சென்றுள்ளது.

புதிய அதிபரான திரு.சிறிசேன முன்னனைய அதிபரின் வழியைப் பின்தொடர்ந்து தனது ஆட்சியை நடாத்தலாம். அல்லது இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம். பல்லின மற்றும் பன்மொழி சமூகத்திற்கேற்ற ஒரு அரசியலை நடாத்துவதற்கேற்ப ஒரு ஆளுமை மிக்க தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்பட முடியும். இவர் இதனைச் செய்தால் இவரது நாடு நன்மை அடையும்.

சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன போன்றே இந்தியாவில் மோடி இக்கட்டானதொரு அரசியற் சூழலில் உள்ளார். இவரது பாரதீய ஜனதாக் கட்சியானது கொலனித்துவத்திற்குப் பின்னர் உருவாகிய ஒரு இந்துத் தேசியவாத அரசியற் கட்சியாகும். தான் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைத்து, நவீனமயமாக்குவேன் என மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால் இதனை அடைவதற்கு கொலனித்துவத்திற்குப் பின்னான புதியதொரு அரசியலை உருவாக்க வேண்டும். இவர் சீக்கியர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் போன்றோரை ஆள்வதற்கான வலுவைப் பெறவேண்டும். இதுவரை மோடி தனது கட்சியிலுள்ள இந்துத் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக ஒரு பலமான கருத்துக்களை முன்வைக்கத் தவறிவிட்டார். இது இந்தியாவிற்குப் பாதிப்பை விளைவித்துள்ளது. ஆனால் இதனை மாற்றுவதற்கு மோடிக்கு காலம் சென்றுவிடவில்லை.

இஸ்லாமிய தீவிரவாதியான அல்குவைதா கொலனித்துவத்திற்குப் பின்னான அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ளனர். எகிப்து, சிரியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகளின் சர்வதிகாரிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கொலனித்துவத்திற்குப் பின்னான தமது ஆட்சியை நியாயப்படுத்துகிறார்கள்.

சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தற்போது அரசியல் ரீதியாக புதிய சாத்தியப்பாடுகளுக்கான ஆரம்பத்தை நாம் காணமுடிகிறது. உலகைப் பொறுத்தளவில் இது கொலனித்து கால அரசியலாகவோ அல்லது கொலனித்துவத்திற்குப் பின்னான அரசியலை ஒத்ததாகவோ இருக்கக் கூடாது. கடந்த கால எதிர்வினைகளாகவோ அமையக் கூடாது. ஆனால் இது எதிர்காலத்திற்கான ஒரு தயார்ப்படுத்தலாக இருக்க வேண்டும். இதனை இரு நாடுகளினதும் புதிய தலைவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *