மேலும்

அமெரிக்காவுக்கு உளவு பார்க்கவா இஸ்ரேலிய ட்ரோன்களை வாங்குகிறீர்கள்?

இஸ்ரேலிடமிருந்து வாங்கப்படும்  ட்ரோன்கள், அமெரிக்காவிற்காக உளவு தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படலாம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கவலை எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், சிறிலங்கா விமானப்படைக்காக  4.261 பில்லியன் ரூபா செலவில், நான்கு ட்ரோன்களை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தினார்.

“ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்குவதற்காக, 4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மேலதிக மதிப்பீடு ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நாம் யாரிடமிருந்து இவற்றை வாங்குகிறோம்? இஸ்ரேலிடமிருந்து. ஏன் இந்த திடீர் அவசரம் ?

கேள்விப்பத்திரம் கோராமல், நேரடியாக கொள்முதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஏன் நாம் இந்த விமானங்களை இஸ்ரேலிடமிருந்து வாங்குகிறோம்?”

இஸ்ரேல் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தரகுப்பணம் பெறப்பட்டிருக்கலாம் என்பது யாருக்குத் தெரியும்?.

இந்த கண்காணிப்பு ட்ரோன்கள் ஈரானியக் கப்பல்களைக் கண்காணிக்கவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கவும் பயன்படுத்தப்படலாம்.

ஈரானை உளவு பார்க்கவும், ஈரானியக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவை குறித்த தகவல்களை வழங்கவுமே இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்காக உளவு பார்க்க நாம் நமது கடற்படையையும் விமானப்படையையும் பயன்படுத்தப் போகிறோமா?.

சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளை, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டாம்.

இத்தகைய செயல்களில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏற்கனவே நீங்கள் போதுமான அளவு சிக்கல்களை உருவாக்கியுள்ளீர்கள்.

கேள்விப்பத்திரம் கோராமல் இஸ்ரேலிடமிருந்து இந்த விமானங்களை வாங்குவதற்கு முன்பாக, பாலஸ்தீன மக்கள் குறித்துச் சிந்தியுங்கள்.

ஈரான் மற்றும் வெனிசுவேலா தொடர்பான அனைத்துலக விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போதுமான வகையில் பதிலளிக்கத் தவறிவிட்டது.

உங்கள் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *