மேலும்

சிறிலங்கா அதிபருடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை அவரது பணியகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் வெளியிட்டுள்ள பதிவில் –

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய கூட்டாண்மை குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை பரஸ்பரம் நன்மைகளை அடையும் வகையில் மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக சிறிலங்கா தற்பொழுது தொடங்கியுள்ள தேசிய செயற்பாடு குறித்து விளக்கிய நான், இந்து சமுத்திரமானது போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியுள்ளதால், சிறிலங்காவின் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன்.

இந்து சமுத்திர வலயத்தில் அமைதியைப் பேணுவதற்கு சிறிலங்கா தொடர்ந்தும் தனது ஆதரவை அளிக்கும் எனவும், ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்ற ரீதியில் சிறிலங்கா தேசிய மற்றும் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கும் என்றும் நான் வலியுறுத்தினேன்.

சிறிலங்கா மீனவர்களின் பிரதான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வை எதிர்பார்ப்பதாகவும் நான் குறிப்பிட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மூன்று புதிய உடன்பாடுகளைப் பரிமாறிக் கொள்வதிலும், இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பெய்லி பாலங்களை மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பது தொடர்பிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *