சிறிலங்கா அருகே 47 கப்பல்கள் – கண்காணிக்கப்படுகிறதா என அமெரிக்கா கேள்வி
சிறிலங்காவுக்கு அருகே அனைத்துலக கடற்பகுதியில் பல ஈரானியக் கப்பல்கள் இருப்பது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விசாரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடகச் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு அருகில் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஈரானியக் கப்பல்கள் மட்டுமல்ல.
சில ஈரானுக்குச் சொந்தமானவை என்றாலும், அவை சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடல் பகுதியிலேயே உள்ளன.
தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களும் அந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன.
வணிகக் கப்பல்கள் அனைத்துலக கடல் பகுதியில் இருப்பது வழக்கமான ஒன்றுதான்.
இந்தக் கப்பல்கள் எங்கள் கடல் எல்லைக்குள் நுழைவதற்கான எந்தக் கோரிக்கையையும் நாங்கள் பெறவில்லை; அவ்வாறு நுழைவதற்கான எந்த அனுமதியையும் நாங்கள் வழங்கவும் இல்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடந்த வாரம் சில கப்பல்கள் சிறிலங்காவின் 12 கடல் மைல் கடல் எல்லைக்குள் – அதாவது கடற்கரையிலிருந்து 11.4 முதல் 11.6 கடல் மைல் தொலைவில் – இருந்ததாகவும், பின்னர் சுமார் 24 கடல் மைல் தொலைவிற்கு நகர்ந்ததாகவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
சிறிலங்கா அதிகாரிகளின் கண்காணிப்பின்படி, அந்தக் கப்பல்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையவில்லை .
“கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பல ஈரானியக் கப்பல்கள் இருப்பது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவித்தது.
அவை குறித்து எங்களுக்குத் தெரியுமா என்றும் அவை கண்காணிக்கப்படுகின்றனவா என்றும் கேட்டது.
அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கப்பல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவை எங்கள் கடல் எல்லைக்குள் இல்லை,என்றும் கூறினார்.
